மகாராஷ்டிரா சந்திராப்பூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரி என்ற இடத்தைச் சேர்ந்த ரோஷன் சதாசிவ் என்ற விவசாயி விவசாயத்தில் தொடர்ந்து இழப்பு ஏற்பட்டு வந்ததால் பால் மாடு வாங்கத் திட்டமிட்டார். இதற்காக உள்ளூர் கந்துவட்டிக்காரர்களிடம் ரூ.1லட்சம் வட்டிக்கு வாங்கினார். அந்தப் பணத்தில் மாடுகள் வாங்கினார். ஆனால் தொழில் தொடங்குவதற்கு முன்பு மாடுகள் இறந்துவிட்டன.
அதோடு விவசாயத்திலும் கடுமையான இழப்பு ஏற்பட்டது. அதிக வட்டிக்கு ரோஷன் கடன் வாங்கி இருந்தார். கடன் கொடுத்தவர்கள் கடனை திரும்பக் கொடுக்கும்படி கேட்டு நெருக்கடி கொடுத்தனர். ஆனால் கடனை திரும்பக் கொடுக்க அவரிடம் பணம் இல்லை. இதனால் நாளுக்கு நாள் வட்டி அதிகரித்துக்கொண்டே சென்றது. இதனால் தன்னிடம் இருந்த டிராக்டர், விவசாய நிலம் மற்றும் வீட்டில் இருந்த பொருட்களை விற்பனை செய்து கடனை கொடுக்க முயன்றார்.
ரோஷன் சதாசிவ்
ஆனாலும் அவரால் கடனை முழுமையாக கொடுக்க முடியவில்லை. அவர் வாங்கிய ஒரு லட்சம் ரூபாய் கடன் ரூ.74 லட்சமாக அதிகரித்தது. கடன் கொடுத்த ஒருவர் இப்பிரச்னைக்குத் தீர்வு காண 'உனது சிறுநீரகத்தை விற்று கடனை அடைக்கலாம்' என்று ஆலோசனை வழங்கினார். இதற்காக ஒரு ஏஜென்டை சந்தித்தார். அவர் மூலம் ரோஷன் கொல்கத்தா சென்றார். அங்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. அங்கிருந்து அவர் கம்போடியாவிற்குச் சென்றார். அங்கு ரோஷனின் ஒரு சிறுநீரகம் ரூ.8 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. அந்தப் பணம் கடன்காரர்களுக்குக் கொடுக்கபட்டது.
அப்படியும் கடனை அடைக்க முடியவில்லை. அதோடு சிறுநீரகத்தை விற்பனை செய்த பிறகு அவரால் அங்கிருந்து இந்தியாவிற்கு வர முடியவில்லை. அவரை லோவோஸ் நகரில் கொத்தடிமையாக வைத்து வேலை வாங்க ஆரம்பித்தனர். இதையடுத்து அங்கிருந்து பிரம்மபுரி தொகுதி எம்.எல்.ஏ.விற்கு தகவல் கொடுத்தார். அரசியல்வாதிகளின் தலையிட்டு தூதகரம் வாயிலாக ரோஷன் அங்கிருந்து மீட்டு கொண்டு வரப்பட்டார்.
ரோஷனுக்கு பிரம்மபுரி நகரைச் சேர்ந்த கிஷோர் பவன்குலே, மனிஷ் கல்பந்தே, லக்ஷ்மன் உர்குடே, பிரதீப் பவன்குலே, சஞ்சய் பல்லார்புரே மற்றும் லக்ஷ்மன் போர்கர் ஆகியோர் கடன் கொடுத்துள்ளனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் குடும்பத்தோடு தீக்குளித்துத் தற்கொலை செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். அவர் கொடுத்துள்ள புகாரின் மீதும் போலீஸார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.