சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று திராவிடர் கழகத்தின் செயற்குழு கூட்டம் தலைவர் கி. வீரமணி தலைமையில் நடைபெற்றது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற திராவிடர் கழகம் கடுமையாக உழைக்கும் என்பது உள்ளிட்ட 8 முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 4 தொகுப்புச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் காந்தி பெயரை நீக்கியதற்குக் கண்டனம் மற்றும் தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கி. வீரமணி, “துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு ‘இளம் பெரியார்’ எனும் தகுதி இருக்கிறது; பெரியார் கொள்கையைத் தூக்கிப் பிடிப்பவர்கள் அனைவரும் பெரியார்தான்” என்று பாராட்டினார். மேலும், நடிகர் விஜய் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய்யின் நிலைப்பாடு என்ன? கட்சி ஆரம்பித்து 2 ஆண்டுகள் ஆகியும் முதல்வர் ஆக வேண்டும் என்ற முடிவைத் தவிர, வேறு எந்தக் கொள்கையையும் அவர் அறிவிக்கவில்லை” என்று விமர்சித்தார்.