பீகார் மாநிலத்தை விட தமிழகத்தில் அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை கடந்த நவம்பர் 4ம் தேதி தேர்தல் ஆணையம் தொடங்கியது. இப்பணிகளுக்கு பல்வேறு எதிர்ப்புகளும் கிளம்பிய போதும், அதனை பொருட்படுத்தாது, திட்டமிட்டபடி தீவிரமாக நடந்து வந்த இப்பணிகள் கொடுக்கப்பட்ட அவகாசத்தை விட (டிச.4), 10 நாட்கள் கூடுதல் அவகாசத்துடன் (டிச.14) நடந்து முடிந்துள்ளன. தொடர்ந்து, நேற்றைய தினம் வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில், 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு தமிழகத்தில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க : திருப்பரங்குன்றத்தில் தீ குளித்தவரின் உயிரிழப்புக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்…நயினார் நாகேந்திரன்!
பீகார் நிலவரம்:சமீபத்தில் சட்டசபை தேர்தல் முடிந்த பீகார் மாநிலத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் (SIR) நடந்தன. அங்கு வாக்காளர் கணக்கெடுப்பு பணிக்கு முன், 7.89 கோடி வாக்காளர்கள் இருந்தனர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டபோது, 7.24 கோடி வாக்காளர்கள் இருந்தனர். அதன்படி, 65 லட்சம் பேர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
குஜராத் நிலவரம்:இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தால், தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், குஜராத் மாநிலமும் அடக்கம். அதன்படி, குஜராத்தில் வாக்காளர் கணக்கெடுப்பு பணிக்கு முன், 5.08 கோடி வாக்காளர்கள் இருந்தனர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டபோது, 4.43 கோடி வாக்காளர்கள் இருந்தனர். அதன்படி, 73.73 லட்சம் பேர், அதாவது 14.50% பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
மேற்குவங்க நிலவரம்:தமிழகத்துடன் சேர்த்து மேற்குவங்க மாநிலத்திற்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி மேற்குவங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. 24 லட்சம் இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. போலி வாக்காளர்கள் 1.38 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. நிரந்தரமாக இடம்பெயர்ந்த 19 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதையும் படிக்க: சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்களுக்கு தடை… மீறி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: சென்னை மாநகாரட்சி
தமிழகத்தில் தான் அதிகம்:அந்தவகையில், தமிழகத்தில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, மாநிலத்தில் வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் துவங்குவதற்கு முன்பு, 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். கணக்கெடுப்பு பணிகள் முடிந்து தற்போது 5.43 கோடி பேர் உள்ளனர். அதாவது, 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம், வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் நடந்து முடிந்த பீகார், குஜராத் மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில் தான் அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.