மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக குறைகளை தீர்க்க QR கோடு அறிமுகம் செய்த அரசு!
TV9 Tamil News December 20, 2025 04:48 PM

தமிழகத்தில் மாதம் தோறும் கோடிக்கணக்கான மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை (Magalir Urimai Thogai) வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒவ்வொரு மாதமும் சுமார் 1.13 கோடி மகளிருக்கு ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 2 கோடி குடும்ப அட்டைகள் உள்ள நிலையில், விடுபட்ட மற்றும் புதியதாக மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியானர்வர்களுக்காக தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப்பட்டன. முகாம்கள் மூலம் சுமார் 28 லட்சம் மனுக்கள் பெறப்பட்ட நிலையில், அவற்றில் மொத்தம் 16.9 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால், ஏராளமான பெண்கள் தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை என புகார் அளித்து வந்தனர். இந்த நிலையில் தான், மகளிர் உரிமைத் தொகை தொடர்பான புகார்களுக்கு தீர்வு கானும் வகையில் அரசு ஒரு முக்கிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

உரிமைத் தொகை கிடைக்காமல் தவிக்கும் மகளிர்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் விண்ணப்பித்து, உரிய ஆவணங்களை சமர்ப்பித்தும் தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என ஏராளமான மகளிர் கூறி வந்தனர். இந்த நிலையில், தகுதியான மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மகளிர் முறையீடு செய்ய கியூஆர் (QR – Quick Response) கோடு மற்றும் https://tnega.org/kmut-grivance என்ற இணையதளத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் மகளிர் தங்களது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக புகார்கள் மற்றும் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மாத சம்பளத்தில் 70% மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும்.. மீதமுள்ள 30% என்ன செய்வது.. CA கூறுவதை கேளுங்கள்!

மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ரகசிய கியூஆர் கோடு

அரசு அறிமுகம் செய்துள்ள இந்த இரண்டு புதிய அம்சங்களின் மூலம் புகார் அளிக்க விரும்பும் நபர்கள் தங்களது பெயர், குடும்ப தலைவர் பெயர், மொபைல் எண், ரேஷன் அட்டை எண் ஆகியவற்றை உள்ளிட்டு பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு விவரங்களை பதிவு செய்யும் பட்சத்தில் மொபைல் எண்ணுக்கு ரகசிய கியுஆர் கோடு அனுப்பி வைக்கப்படும். அந்த கியுஆர் கோடு மூலம் தங்களது குறைகளை புகாராக பதிவு செய்துக்கொள்ள வழிவகை செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆன்லைன் வாயிலாக பதிவு செய்யப்படும் புகார்கள், வருவாய் கோட்டாட்சியர் மூலம் சரிப்பார்க்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.