வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
தமிழக அரசியலில் கடந்த முப்பது ஆண்டுகளாக இடைவெளியின்றி ஒலித்துக் கொண்டிருந்த ஒரு கேள்வி என்றால் அது ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பே. 1991 முதல் 2020 வரை ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைகளில் எத்தனை மாற்றங்கள் நடந்தாலும், இந்த ஒரே கேள்வி மட்டும் மக்கள் மனதில் மறைந்து போகவில்லை.
கருணாநிதி - ஜெயலலிதா அரசியல் போட்டியின் தீவிரம், பஞ்மில்ல அரசியல் அதிர்வுகள், மத்திய அரசின் ஆட்சிமாற்றங்கள், அதனுடன் சேர்த்து மாற்றத்திற்கான மக்கள் ஏக்கம் - இவை அனைத்தும் இணைந்தபோது ரஜினியின் அரசியல் வருகை ஒரு தனிநபர் முடிவைத் தாண்டி, ஒரு சமூக உற்சாகமாக மாறியது. அந்த சக்தி நிறைவேறாமல் போனது, ஆனால் அதன் தாக்கம் தமிழக அரசியலில் இன்னும் தொடர்ச்சியாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ராஜீவ் காந்தி
தமிழக அரசியல் சந்தித்த கடுமையான அதிர்வுகள்
1990–களின் தொடக்கத்தில் தமிழக அரசியல் கடுமையான அதிர்வுகளை சந்தித்தது. 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலை, அதற்கு பிறகு உருவான தேசிய உணர்வு அலை, ஜெயலலிதாவின் அதிரடி வெற்றி, பின்னர் ஊழல் குற்றச்சாட்டுகள்; திமுகவின் பிளவு இவை அனைத்தும் மக்கள் மனநிலையில் பெரிய மாற்றத்தை உருவாக்கின.
அப்போது ரஜினிகாந்த் கூறிய 1996 அரசியல் கருத்து தேர்தல் வரலாற்றில் ஒரு பெரிய மாறுபாட்டை ஏற்படுத்தியது “ஜெயலலிதா மீண்டும் முதல்வரானால் ஆண்டவனால் கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது” அந்த ஒரு கூற்றின் பின்னணியில் மக்கள் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தை பார்த்தால், ரஜினி அப்போது களமிறங்கியிருந்தால் அவருக்கு வெற்றி நிச்சயம் இருந்திருக்கும் என்று பல அரசியல் ஆய்வாளர்கள் கூறியிருப்பது ஆச்சரியம் அல்ல.
மாற்றத்திற்கான மக்கள் மனநிலை, “நேர்மையான மனிதர்” என்ற ரஜினி உருவத்துடன் சேரும் போது அது ஒரு பெரிய அரசியல் அலைகளாக மாறியிருக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் அது நிகழவில்லை.
2001 முதல் 2014 வரை தமிழக அரசியல் அதிமுக - திமுக ஆட்சி மாற்றங்களால் நிரம்பியது. ஊழல் வழக்கின் அதிர்வுகள், திமுகவில் ஸ்டாலின் தலைமையின் எழுச்சி, ஜெயலலிதாவின் இரண்டாவது ஆட்சி, மத்திய அரசில் மாற்றங்கள், இதன் நடுவே மக்கள் அடிக்கடி ரஜினியை ஒரு “மாற்றத் தலைவர்” என எதிர்பார்த்தனர்.
குறிப்பாக 2010 பிறகான காலத்தில் ஊழலுக்கு எதிரான கோபம் அதிகரித்தபோது, அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற புதிய அரசியல் மாதிரி தெற்கிலும் தோன்றுமா என்ற யோசனை மக்களிடையே எழுந்தது. ரஜினி அந்த தருணத்தில் களத்திற்கு வந்திருந்தால், மாற்ற அரசியலின் புதிய வடிவம் உருவாகியிருக்கலாம்.
ஜெயலலிதா
2016, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட அதிகார வெற்றிடம் தமிழக அரசியலை மேலும் குழப்பத்தில் தள்ளியது. அதிமுகவில் தலைமை மோதல், திமுகவில் ஸ்டாலின் தலைமையின் உறுதி, மக்கள் மனதில் இருந்த இந்த சூழலில் ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கை மிக உயர்ந்தது. அவர் வந்திருந்தால் அரசியல் களம் முற்றிலும் மாறியிருக்கலாம். அவரைச் சுற்றி உருவான எதிர்பார்ப்பு, பொதுமக்களின் மாற்ற ஏக்கம், மக்கள் உணர்வாக மாறியது.
ஆனால் ரஜினி அரசியலுக்கு வருவதால் எல்லாம் எளிதாகிவிடும் என நினைப்பது தவறு. அவரது உடல்நல பிரச்சனைகள், தொடர்ச்சியான மருத்துவ கவலைகள், அரசியலில் தேவைப்படும் தினசரி நிர்வாக திறன். அரசியலில் இருப்பது திரைபட நாயகனின் புகழால் தீர்க்கப்பட முடியாத ஒன்று.
கட்சியின் தலைமை பணி, மாவட்ட நிர்வாகம், எதிர்க்கட்சிகளின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் மன வலிமை, ஒழுங்கு படைத்த தலைமை இவை அனைத்தும் கண்டிப்பாக வேண்டும். ரஜினி களம் இறங்கியிருந்தால், அவரைச் சுற்றிய தாக்குதல்களும், எதிர்ப்புகளும், விமர்சனங்களும் மற்ற நடிகர்களை விட அதிகமாக இருந்திருக்கும். ஏனெனில் அவரிடம் இருந்த மக்கள் நம்பிக்கை அவரை பலருக்குப் “அபாயகரமான எதிரி”யாக மாற்றியிருக்கும்.
ரசிகர் மன்றங்களை நேரடியாக அரசியல் அமைப்பாக மாற்றுவது தமிழ்நாட்டில் மிகச் சிக்கலான ஒன்றாகும். ரசிகர்களின் உற்சாகம் வாக்காளர்களின் முடிவும் எப்போதும் ஒரே கோட்டில் வருவது அரிது. அரசியல் என்றால் உணர்ச்சி மட்டும் அல்ல;
அதற்கு பின்னால் நுணுக்கமான கணக்குகளும், சமூக இயக்கங்களும், நிலைமைகளின் கூற்றுகளும் செயல்படும். கட்சி உருவாகும் கட்டத்தில் ஊள்ளுக்குள் பிரிவினைகள், தலைமைப் போட்டிகள், அமைப்பு குழப்பம் இது ரஜினியின் ஆரம்ப கட்ட அரசியல் பயணத்தில் மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கும்.
ரஜினி அரசியல்
மத்திய அரசுடன் நல்ல உறவு அரசியலில் முக்கியம். பாஜகைக்கு தெற்கில் ஒரு பெரிய முகம் தேவைப்பட்டபோது ரஜினி உதவியிருக்கலாம், ஆனால் தமிழகத்தில் பாஜக எதிர்ப்பு இருந்ததால் அவர்களுடன் நெருக்கம் ரஜினிக்கு பிரச்சனை ஏற்படுத்தியிருக்கும். மத்திய அரசு அவரை ஆதரித்திருந்தால் வளர்ச்சிக்கு சில நன்மைகள் இருந்திருக்கலாம், ஆனால் எதிர்க்கட்சிகள் அவரை “பாஜக முகம்” என்று விமர்சித்திருப்பார்கள். இவரின் பாஜக அடையாளம் காரணமாக திராவிட அரசியல் மேலும் வலுவாக எதிர்த்திருக்கும். இத்தகைய சூழலில் ரஜினி மூன்றாவது சக்தியாக உயர்ந்திருக்க வாய்ப்பு இருந்தது.
2021 தேர்தலை எடுத்துக்கொண்டால், ரஜினி களமிறங்கியிருந்தால் சில இடங்களை எளிதில் பெற்றிருக்கலாம் அல்லது பல இடங்களில் வெற்றி தோல்வியை. அவர் சரியான கூட்டணிகள் அமைத்திருந்தால், அரசியல் கணக்கு மேலும் வலுப்பெற்றிருக்கும். அந்த சூழலில் தமிழ்நாட்டில் கூட்டணி அரசின் புதிய வடிவம் பிறந்திருக்க வாய்ப்பு இருந்தது.
ஆனால் அவர் வராமல் இருந்தது இந்த கதையை முற்றிலும் மாற்றியது. 2017–2020 களத்தில் அவர் எடுத்த முடிவுகளில் தெளிவின்மையும், அடிக்கடி தள்ளிப்போகும் அறிவிப்புகளும், கட்சி அமைப்பு சீராக உருவாக்கப்படாததும், இறுதியில் 2020-ல் அரசியலிலிருந்து விலகிய முடிவும். மொத்தமாக குழப்பத்தில் முடிந்தது
ரஜினி அரசியலில் வராமலிருப்பதாக அறிவித்த பிறகு, அவர் நடிப்பதை விட அவரது அரசியல் முடிவுகளே அதிகம் பேசப்பட்டன.. ரசிகர்களும் இரண்டு குழுவாகப் பிரிந்தனர்—உடல்நிலை காரணமாக அவர் அரசியலில் இருந்து விலகிய முடிவை புரிந்துகொண்டவர்கள் ஒரு பக்கம்; நீண்ட காலம் காத்திருந்தும் அவர் இறுதியில் வராததால் வருத்தப்பட்டவர்கள் மற்றொரு பக்கம். இந்தப் பிளவு ரஜினி மீது இருந்த மக்கள் ஆதரவைக் குறைக்கும் வகையில் செயல்பட்டது.
முதலில், அரசு அல்லது சில கட்சிகள் தரப்பில் பார்த்தால், ரஜினிகாந்த் வராமலிருப்பது இரு முக்கிய கட்சிகளுக்கும் இடையே நிலைத்த நிலையான பாதுகாப்பதாக இருந்தது. தனிநபர் மற்றும் சமூக அடிப்படையிலான வாக்களிப்பு முறைகளில் எந்த மாற்றம் ஏற்படவில்லை. அதாவது, திமுக மற்றும் அதிமுக போன்ற முக்கிய கட்சிகள், அவர்களது நிலையான வாக்களிப்பாளர் ஆதரவையும், எதிர்கட்சிகளால் பிரிக்கப்படாமல் இருப்பதையும் வலுவாக காத்து வைத்துக் கொண்டனர்.
ரஜினிகாந்த் போன்ற பெரிய ரசிகர் அடிப்படை அரசியலில் நுழைந்திருந்தால், அது தேர்தல் முடிவுகளை முற்றிலும் மாற்றியிருப்பதற்கான சக்தி கொண்டிருந்தது. அவரின் வராமை, இரண்டு பெரிய கட்சிகளுக்கும் ஒரு வகையான பாதுகாப்பை எளிமையான முறையில் வழங்கியது.
ரஜினியின் சினிமா ஈர்ப்பு எப்போதும் போலவே அசைக்க முடியாத ஒன்றாகவே இருந்தது; உண்மையில், அவரின் அரசியல் தீர்மானங்களுக்குப் பிறகு வெளிவந்த படங்கள்தான் அதிக வசூல் குவித்தன என்பது அவரின் அசாதாரண கவர்ச்சியின் மிகத் தெளிவான சான்று. ரசிகர்கள் ரஜினியை ஒருபோதும் ஒரு அரசியல்வாதியாகப் பார்க்கவில்லை; அவர்கள் கண்களில் அவர் எப்போதும் திரைக்கு எழுந்து வரக்காத்திருக்கும் அந்த ஒரே Superstar. அவர் அரசியல் உலகில் எத்தனை குழப்பங்களையும், மாற்றங்களையும் சந்தித்தாலும், திரைக்கு வந்தபோது ரசிகர்கள் முன்பை விட அதிக உற்சாகத்துடன் அவரை வரவேற்றனர்.
ஜெயிலர் உலகளவில் ஆயிரம் கோடியைத் தாண்டிய கணிசமான வசூல் செய்த தருணம், ரஜினியின் நட்சத்திரத் திறன் எந்த சூழலிலும், எந்த விமர்சனங்களிலும், எந்த தடைகளிலும் தளராத ஒரு பேரொளி என்பதை மறுபடியும் உலகிற்கு அறிவித்தது. அரசியல் அவருக்குச் சில நிழல்கள் தந்திருக்கலாம்; ஆனால் சினிமாவில், அவர் எழுந்து நிற்கும் ஒவ்வொரு முறையும் அந்த நிழல்களை எல்லாம் தாண்டி ஒளிவீசும் சக்தி ரஜினியிடம் இன்னும் பசுமையாகவே உள்ளது.
இவ்வாறு பார்க்கும்போது, ரஜினிகாந்தின் அரசியல் பயணம் நிறைவேறாத கனவு போலவும், தமிழ் அரசியலின் மனநிலையில் நிலைத்திருக்கும் ஒரு நிரந்தரக் கேள்விக்குறி போலவும் மாறியுள்ளது. அவர் அரசியலுக்குள் இறங்காததால் உருவான வெற்றிடமும், அவர் வந்திருந்தால் நிகழ்ந்திருக்கும் மாற்றத்தின் சாத்தியங்கள் இரண்டும் இன்னும் அரசியல் விவாதங்களின் நரம்புகளில் துடிக்கின்றன.
ஜெயிலர்
ரஜினி அரசியலில் தோல்வியுற்றார் என்று கூறுவது உண்மையை மங்கச் செய்வது; உண்மையில், அவர் அரசியலுக்குள் நுழைய முயன்ற அதே தருணமே, நிறைவேறாத ஒரு மகா முயற்சியாக மக்கள் நினைவில் பதிந்திருக்கிறது.
அதே சமயம், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக மட்டுமல்ல, வசூல் சக்ரவர்த்தியின் அரியணையை வருடங்களாகத் தொட்டுப் பார்க்க யாருக்கும் வாய்க்காதபடி உறுதியான செங்கோலாகப் பிடித்திருக்கும் அபூர்வமான நடிகரின் கம்பீரத் தன்மை, திரைத்துறையில் அவர் உருவாக்கிய இடத்தை இன்னும் எவராலும் சிதைக்க முடியாத புகழின் சிகர நிலைக்கு உயர்த்தியுள்ளது.
தேர்தல்