சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் பலர், அங்குள்ள புனிதமான 18 படிகள் மற்றும் மாளிகைப்புறம் உள்ளிட்ட பகுதிகளில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இத்தகைய செயல்கள் கோயிலின் புனிதத்தன்மையையும், பாதுகாப்பு நடைமுறைகளையும் பாதிப்பதாகப் புகார்கள் எழுந்தன.
இதைக் கருத்தில் கொண்டு, பக்தர்கள் கோயிலின் முக்கிய இடங்களில் மொபைல் போன் பயன்படுத்தவும், படம் பிடிக்கவும் கேரள காவல்துறை இன்று (டிசம்பர் 20) அதிரடித் தடை விதித்துள்ளது. மீறி யாராவது புகைப்படம் அல்லது காணொளி எடுத்தால், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
புனிதமான பதினெட்டு படிகளில் ஏறும்போதும், கருவறை மற்றும் மாளிகைப்புறம் பகுதிகளிலும் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், வழிபாட்டில் அமைதியை நிலைநாட்டவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.