``நடிகர் ஶ்ரீனிவாசன் என் வகுப்புத் தோழர்; நல்ல மனிதர்" - நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
Vikatan December 20, 2025 05:48 PM

மூத்த மலையாள நடிகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட நடிகர் ஸ்ரீனிவாசன் (69) இன்று காலமானார்.

கடந்த சில மாதங்களாக உடல்நலமின்மையால் சிகிச்சையில் இருந்த நடிகர் ஶ்ரீனிவாசன், உதயம்பெரூரில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை திடீரென மோசமானதைத் தொடர்ந்து அவர் திருப்புனித்துறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி இன்று (சனிக்கிழமை) காலை காலமானார்.

நடிகர் ஶ்ரீனிவாசன்

நடிகர், எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளராக அவரது பங்களிப்பு நவீன மலையாளத் திரையுலகை வடிவமைக்க உதவியதுடன், பல தலைமுறை நடிகர்கள் மற்றும் இயக்குநர்களையும் உத்வேகப்படுத்தியிருக்கிறது.

தேசிய திரைப்பட விருதுகள், கேரள மாநில திரைப்பட விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், பல வாழ்நாள் சாதனையாளர் அங்கீகாரங்கள் உட்பட ஏராளமான விருதுகளை வென்றிருக்கிறார்.

நடிகர் ஶ்ரீனிவாசனின் மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்திவருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டிருக்கும் ஆடியோவில், ``என் நல்ல நண்பன் ஶ்ரீனிவாசன் மரணச் செய்தியைக் கேட்டதும் அதிர்ச்சியாக இருக்கிறது. அவர் திரைப்படக் கல்லூரியில் என் வகுப்புத் தோழர். ஒரு சிறந்த இயக்குநர், நடிகர் மட்டுமல்ல... மிகவும் நல்ல மனிதர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

‘`வீட்டில் நிம்மதி... வெளியில் கௌரவம்...’’ - நடிகர் ரஜினிகாந்த் சொல்வது நடைமுறை சாத்தியம்தானா?
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.