சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமத்துரை போன்ற படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்திருக்கும் திரைப்படம் கொம்பு சீவி. மதுரை, தேனி வட்டாரங்களில் கதை நடப்பது போல இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அப்பாவைப் போலவே ஒரு பக்கா கிராமத்து கதையில் நடித்திருக்கிறார் சண்முக பாண்டியன்.
இந்த படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்க தர்ணிகா என்கிற இளம் நடிகை கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். டிசம்பர் 19ஆம் தேதியான நேற்று இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஒரு அம்மா பாடல் வருகிறது. அந்த பாடலை இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்த பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்நிலையில்தான் விழா ஒன்றில் பேசிய இயக்குனர் பொன்ராம் அந்த பாடல் உருவானது பற்றி பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். நான் யுவனை சந்தித்தபோது அம்மா பாடலை பாடுவது பற்றி நீங்களே அப்பாவிடம் கேளுங்கள் என சொல்லிவிட்டார். நானும் தயாரிப்பாளரும் சென்றோம்.
‘இந்த படத்தில் ஒரு அம்மா பாடல் வருகிறது.. நீங்கள் பாட வேண்டும்’ என்று கேட்டேன்.. ‘உனக்காகவெல்லாம் நான் அம்மா பாட்டு பாட முடியாது’ என்றார். ‘கதை தேனியில் நடக்கிறது’ என்றேன்.. அதற்கு ‘எல்லா கதையும் தேனியில்தான் நடக்குது.. எல்லாம் அங்கதான் எடுக்குறாங்க’ என்று சொன்னார். ‘உங்களை பாட வைக்கிறது என்னோட கனவு’ என்றேன். ‘உன் கனவ நான் எப்படி நிறைவேத்த முடியும்?’ எனக் கேட்டார். என்னடா எந்த பால் போட்டாலும் சிக்சரா அடிக்கிறாரேன்னு நினைச்சேன்.. அதன்பின் ‘நான் இப்படித்தான் பேசுவேன்’ என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
அப்போது அருகில் இருந்தவர்கள் ‘உன்னை இவ்வளவு கலாய்க்கிறார் என்றால் கண்டிப்பாக அவர் பாடி கொடுப்பார்’ என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னது போலவே இரண்டு வாரத்தில் அவரே போன் செய்து அந்த பாடலை நான் பாடுகிறேன் என சொல்லி பாடி கொடுத்தார். அவருக்கு மிகப்பெரிய நன்றி’ என்று பேசியிருக்கிறார்.