தமிழகத்தில் குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டு வரும் மிகப்பெரிய நெட்வொர்க்கைத் தனிப்படை போலீசார் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இதில் 60-க்கும் மேற்பட்ட நபர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக மும்பை, அகமதாபாத் மற்றும் புனே போன்ற நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் நடைபாதைகளில் இருந்து குழந்தைகளைக் கடத்தி வந்து, தமிழகத்தில் உள்ள குழந்தை இல்லாத தம்பதிகளுக்குச் சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்துள்ளனர். இதில் பெண் குழந்தைகள் ரூ. 4 லட்சத்திற்கும், ஆண் குழந்தைகள் ரூ. 5 லட்சத்திற்கும் விலை பேசப்பட்டுள்ளனர்.
இந்தக் கடத்தல் கும்பலுக்குத் தலைவிகளாகச் சென்னையைச் சேர்ந்த சபானா, அவரது சகோதரி ரேஷ்மா மற்றும் கொடைக்கானலைச் சேர்ந்த உமா மகேஷ்வரி ஆகியோர் செயல்பட்டு வருவதும், அவர்களைப் போலீசார் ‘கடத்தல் ராணிகள்’ என அடையாளம் கண்டு தேடி வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஈரோடு சிதோடு காவல் நிலையத்தில் பதிவான ஒரு கடத்தல் வழக்கை விசாரித்தபோது, இந்த விஸ்வரூப கடத்தல் பின்னணி அம்பலமானது. சேலத்தைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது இரண்டாவது மனைவி நித்யா ஆகியோர் நரிகுறவ தம்பதியின் குழந்தையைக் கடத்திய புகாரில் கைதாகியுள்ளனர்.
இவர்களோடு சேலத்தைச் சேர்ந்த ஜானகி மற்றும் செல்வி என்ற சகோதரிகளும் கைதாகினர்; இவர்கள் வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 நாட்களே ஆன பெண் குழந்தையும், 8 மாதப் பெண் குழந்தையும் மீட்கப்பட்டன. கடத்தலுக்கு உடந்தையாக இருந்த ஆம்புலன்ஸ் டிரைவர் பிரவீன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடத்தி வரும் ஏஜென்டுகளுக்கு ஒரு குழந்தைக்கு ரூ. 1 லட்சம் வரை கமிஷன் வழங்கப்படுவது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தக் கும்பலின் எஞ்சிய நபர்களைப் பிடிக்கத் தனிப்படை போலீசார் வெளிமாநிலங்களுக்கு விரைந்துள்ளனர்.