TVK : ``எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சொன்னதை நானும் சொல்கிறேன்; திமுக ஒரு தீயசக்தி!" - விஜய் காட்டம்
Vikatan December 19, 2025 10:48 AM

ஈரோடு பெருந்துறையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடந்து வருகிறது. ஏற்கெனவே கரூர் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கையாக பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விஜய் உள்ளிட்ட தலைவர்கள் பேசுவதற்கு மேடை எதுவும் அமைக்கப்படவில்லை.

மக்கள் அமருவதற்கு நாற்காலிகளும் போடப்படவில்லை. பரப்புரை பேருந்தில் நின்று விஜய் பேசுவதை, தடுப்புகளுக்குள் நின்று மக்கள் கேட்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

தவெக - ஈரோடு பொதுக்கூட்டம்

கூட்ட நெரிசல் எதுவும் ஏற்படாத வகையில் 20 ஏக்கர் பரப்பளவில் 72 பிரிவுகளாகப் பிரித்து மக்கள் நிற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்த 60 ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு குடிநீர் வழங்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை இந்த பொதுக்கூட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த த.வெ.க தலைவர் விஜய் அங்கிருந்து கார் மூலம் பெருந்துறை வந்தடைந்தார்.

அதைத் தொடர்ந்து இந்தப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய த.வெ.க தலைவர் விஜய்,`` ஈரோட்டில் மஞ்சள் குறித்து பேசாமல் இருக்கமுடியாது. நம் கட்சிக் கொடியிலும் அந்த மஞ்சள் இருக்கும். சிலக் கூட்டம் எனக்கும் மக்களுக்கும் இடையே இருக்கும் உறவை எப்படி பிரிக்கலாம் என சூழ்ச்சிகள் செய்துகொண்டிருக்கிறது.

இது இன்று நேற்றுவந்த உறவு அல்ல... சுமார் 30 - 35 வருட உறவு. நீங்கள் என்ன செய்தாலும், எல்லாவற்றையும் விட்டுவந்த இந்த விஜயை மக்கள் ஒருநாளும் கைவிடமாட்டார்கள் என்பது, சூழ்ச்சியாளர்களுக்கு தெரியாமல் போயிற்று. உங்களை நம்பித்தான் வந்திருக்கிறேன். உங்களுக்கு எப்போதும் நன்றியுடனே இருப்பேன்.” என்றார்.

தொடர்ந்து பேசுகையில், ``அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை விரிவுப்படுத்தி செயல்படுத்தினால் அந்தப் பகுதி மக்களுக்கு எவ்வளவு புரோயோஜனமாக இருக்கும். அதை ஏன் செயல்படுத்தவில்லை. வள்ளுவர் கோட்டத்துக்கு காண்பிக்கும் அக்கரையை மக்கள் வாழ்வாதரத்தின் மீது ஏன் காட்டுவதில்லை. இங்கு அரசு நடக்கிறதா? அல்லது அரசு கண்காட்சி நடத்துகிறதா?

ஈரோடு கடப்பாரை குறித்து எப்படி பேசாமல் இருப்பது. தமிழ்நாட்டைப் புரட்டிப்போட்ட ஈரோடு நெம்புகோல். இட ஒதுக்கீடு தொடர்பான அரசியல் சட்டத் திருத்ததுக்காக போராட்டம் நடத்தியவர் தந்தைப் பெரியார். 100 வருடத்துக்கு முன்னாடியே வகுப்புவாரி பிரநிதித்துவம் கேட்டவர்.

அண்ணாவிடமிருந்தும், எம்.ஜி.ஆரிடமிருந்தும் தேர்தல் அணுகுமுறையை எடுத்துக்கொண்டோம். இவர்கள் இருவரும் தமிழ்நாட்டின் சொத்து. இவர்கள் இருவரையும் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அவர்களை எடுத்துக்கொள்ளக்கூடாது என யாரும் அழுதுக்கொண்டிருக்கக் கூடாது.

உங்களுக்கு தவெக ஒரு பொருட்டே இல்லை என்றால் பிறகு ஏன் கதறுகிறீர்கள். பொலம்புகிறீர்கள். முதலில் மண்டைமேல் இருக்கும் கொண்டையை மறைங்க சார். உங்களுக்கு நீங்கள் கொள்ளையடித்திருக்கும் காசு துணை என்றால் எனக்கு இந்த மக்கள் மாஸ் தான் துணை. பெரியாரை பின்பற்றுவதாக கூறிக்கொள்ளும் ஆட்சியாளர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள். பெரியார் பெயரைக் கூறிக்கொண்டு கொள்ளையடிக்காதீர்கள். நம் அரசியல் எதிரி தி.மு.க. கொள்கை எதிரி பா.ஜ.க.” என்றார்.

மேலும், மஞ்சளை மதிப்பை கூட்டி விற்பனை செய்ய அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை. கரும்பு, நெல் கொள்முதலில் ஊழல். மஞ்சளுக்கு நியாயமான விலை நிர்ணயித்து விவசாயிகளுக்கு நல்லது செய்ய சிந்திப்பதே இல்லை.

பவானி - நொய்யலாறு - அமராவதி இணைப்பு திட்டத்துக்கு ஒரு துரும்பையும் கிள்ளிப்போடவில்லை. ஆறுகளை சுத்தப்படுத்துவோம் எனச் சொன்னார்கள்... ஆனால், ஆற்றுமணலை கொள்ளையடிப்பதை மட்டும் சிறப்பாக செய்வார்கள். மற்ற மாவட்டத்தில் மலை, மணல் காணாமல் போனதுபோல இந்த மாவட்டத்தில் செம்மண்ணும் காணாமல் போகலாம்.

அரசு நெசவாளர்களிடமிருந்து கொள்முதல் செய்த வேட்டி சேலைக்கான ஊதியம் கூட போராடிதான் பெறவேண்டியிருக்கிறது. பீக் ஹவர்ஸ் மின்சாரத்துக்கான விலையை கூட்டி நம் பொருளாதாரத்தில் அடிக்கிறார்கள். எல்லா மாவட்டத்திலும் பிரச்னைகள் இருக்கிறது. இதையெல்லாம் தீர்க்க எந்தத் தீர்வையும் கொடுக்காமல் மாடல் அரசு எனப் பெருமை பேசுகிறார். நான் சலுகைகளுக்கு எதிரானவன் கிடையாது. மக்களுக்கான சலுகைகளை இலவசம் எனச் சொல்வதும், ஓசி எனச் சொல்வதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எல்லோருக்கும் வீடு கட்டிக்கொடுப்போம் எனக் கூறினோம். எல்லோரும் குறைந்தபட்சம் டிகிரி முடிக்க வேண்டும் எனக் கூறினோம். குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வருமானம். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, சட்ட ஒழுங்கு சரியில்லை எனக் கூறினால் இதெல்லாம் ஏற்கெனவே நாங்கள் செய்துவிட்டோம் எனப் பொய்ச் சொல்லி வாயால் வடை சுடுகிறார்கள்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சொன்னதை நானும் இப்போது சொல்கிறேன். தி.மு.க ஒரு தீயசக்தி. தவெக ஒரு தூய சக்தி. அண்ணன் செங்கோட்டையன் நம்முடன் வந்து சேர்ந்தது நமக்கு பெரும் பலம். அவர்போல வந்து சேரும் அனைவருக்கும் உரிய அங்கீகாரம் கொடுப்போம். என் கேரக்டரையே புரிஞ்சிக்கமாட்றியே என சிஎம் சார் பேசுகிறார். தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் நீங்களும், ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் அவரும் முதலில் எங்களின் கேரக்ட்ரை புரிஞ்சிக்கிங்க" என்றார்.

(விஜய்யின் உரை தொடர்ந்து இங்கு அப்டேட் செய்யப்படும்)

ஈரோடு: காதல் திருமணம்; தங்கையைக் கடத்திச் சென்ற அக்கா உள்ளிட்ட 5 பேர் கைது - விவரம் என்ன?
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.