கோவையைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு ஆம்னி பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தார்.
இந்த பேருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அதே பேருந்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது கவுஸ் (40) என்பவரும் பயணம் செய்தார். இவர் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இளம்பெண் அவரிடம் எதிர்ப்பு தெரிவித்தபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அந்த இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு, முகமது கவுஸை கைது செய்தனர். அவர் பெங்களூருவில் உள்ள ஒரு உணவு வினியோக நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.