தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்துள்ள நிலையில், பிரிந்து சென்ற மற்ற அணிகளையும் ஒருங்கிணைக்கத் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முயற்சிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் அமித் ஷா, டிடிவி தினகரனுடன் தொலைபேசியில் பேசியதாகவும், அப்போது கூட்டணி குறித்தும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் இணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தேமுதிக, தமாகா, தமமுக மற்றும் புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரையும் உள்ளடக்கிய ஒரு மெகா கூட்டணியை உறுதி செய்ய டெல்லி மேலிடம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க ஒப்புக்கொள்ளும் வரை கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை என டிடிவி தினகரன் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், தற்போது அமித் ஷாவின் நேரடித் தலையீடு தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.