செக் மோசடி வழக்கில், திரைப்பட இயக்குனர் லிங்குசாமி மற்றும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் குற்றவாளிகள் என சென்னை அல்லிக்குளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
‘ஆனந்தம்’, ‘ரன்’, ‘சண்டகோழி’, ‘பீமா’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய லிங்குசாமி, கடந்த 2014-ம் ஆண்டு ‘திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில், 2016-ம் ஆண்டு தனியார் நிதி நிறுவனத்திடமிருந்து ரூ.35 லட்சம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
அந்த கடனை காலத்திற்குள் திருப்பி செலுத்தாததால், வட்டியுடன் சேர்த்து ரூ.48.68 லட்சம் வழங்குமாறு அந்த நிறுவனத்தின் மேலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை அல்லிக்குளம் நீதிமன்றம், லிங்குசாமி மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து, இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. மேலும், கடனாக பெற்ற தொகையை வட்டியுடன் ரூ.48.68 லட்சமாக, 2 மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.