எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிகராக வளர துவங்கிய போது கலைஞர் கருணாநிதி கதாசிரியராகவும், வசனகர்த்தாகவும் சினிமாவில் வளர்ந்து வந்தார். எம்.ஜி.ஆரின் ஆரம்ப காலத்தில் சில படங்களுக்கு கருணாநிதி கதை வசனமும் எழுதியிருந்தார். அப்படித்தான் இருவருக்கும் இடையே நட்பு பலமானது. பெரியாரிடமிருந்து பிரிந்து அறிஞர் அண்ணா திமுகவை துவங்கிய போது அந்த கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் கலைஞர் கருணாநிதி. அண்ணாவின் ஆதரவாளராக மாறிய எம்.ஜி.ஆர் திமுகவை ஆதரித்து வந்தார். பல வருடங்கள் தனது படங்களில் திமுகவை புரோமோட் செய்தும் வந்தார்.
எம்.ஜி.ஆருக்கு மக்களிடம் இருந்த செல்வாக்கை பார்த்துவிட்டு திமுக பொருளாளர் பதவியை எம்ஜிஆருக்கு கொடுத்தார் அண்ணா. ஆனால் அண்ணாவின் மறைவுக்கு பின் நிதி முறைகேடு தொடர்பாக சில கேள்விகளை எம்ஜிஆர் எழுப்பியதால் அவரை கட்சியிலிருந்து நீக்கினார் கருணாநிதி.
எனவே அதிமுக என்கிற புதிய கட்சியை துவங்கி திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக மாறினார் எம்ஜிஆர். எம்ஜிஆர் கட்சி தொடங்கி மூன்று சட்டமன்ற தேர்தலில் அதிமுகவே தொடர்ந்து வெற்றி பெற்று எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தார். அந்த 15 வருடங்கள் திமுக ஆட்சியில் அமரவில்லை. ஆனாலும் எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டு வந்தார் கலைஞர் கருணாநிதி.
தற்போது வரை திமுகவுக்கு அதிமுக போட்டியாக அரசியல் களத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் ஒரு புதிய தகவலை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியிருக்கிறார். ஊடகம் ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.பாரதி ‘கடைசி காலங்களில் எம்ஜிஆர் உடல்நிலை குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது கருணாநிதி அவரை சந்திக்க முயற்சி செய்தார். ஆனால் அவரை சந்திக்க விடாமல் தடுத்து விட்டனர்.. அப்போது மட்டும் எம்ஜிஆர் கருணாநிதியை சந்தித்திருந்தால் அதிமுகவை அவரிடம் ஒப்படைத்திருப்பார். ஆனால் சதிகாரர்கள் தடுத்து விட்டார்கள்’ என்று ஒரு புதிய தகவலை கூறி இருக்கிறார்.