மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 246 நகராட்சி மற்றும் 42 நகர பஞ்சாயத்துகளுக்கு கடந்த டிசம்பர் 02-ஆம் தேதி மற்றும் 20-ஆம் தேதி என இருகட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜ, சிவசேனா, காங்கிரஸ் என அனைத்துக் கட்சிகளும் தனித்து போட்டியிட்டன. இதில், சில நகராட்சிகளில் மட்டும் பாஜ மற்றும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
அதன்படி, இன்று காலை முதல் ஓட்டுகள் எண்ணப்பட்டு வந்தன. இதில், மஹாராஷ்டிராவை ஆளும் பாஜ தலைமையிலான மஹாயுதி கூட்டணி 200 இடங்களுக்கு மேல் முன்னிலை வகித்துள்ளது. பாஜ 118 இடங்களிலும், ஷிண்டேவின் சிவசேனா 59 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 37 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸ் 32 இடங்களிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 09 இடங்களிலும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 08 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
மஹாராஷ்டிரா மாநில உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி வாய்ப்பை பெற்றுள்ள பாஜவுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அத்துடன், பாஜ மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.