அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமல், சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் பணியில் அந்நாட்டு அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆவணங்கள் இன்றி கைது செய்யப்பட்டவர்கள் கைவிலங்கு போட்டு விமானம் மூலம் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனை எதிர்த்து அந்நாட்டு நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டது. பல நகரங்களில் போராட்டங்களும் வெடித்தன.
இந்நிலையில், அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் இந்தாண்டுக்குள் நாட்டை விட்டு தாமாக முன்வந்து வெளியேறினால், அவர்களுக்கு 03 ஆயிரம் அமெரிக்க டாலர் ஊக்கத்தொகை (இந்திய மதிப்பில் 2.70 லட்ச ரூபாய்), விமான கட்டணம் இலவசம், அபராதம் ரத்து செய்யப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு செயலியில் (CBP)பதிவு செய்து இந்தாண்டு இறுதிக்குள் தாமாக முன்வந்து வெளியேறும் சட்டவிரோத குடியேறிகளுக்கு 03 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 2,70,738 ரூபாய்) ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
அதனுடன், அவர்கள் இலவசமாக விமானத்தில் பயணிக்கலாம் என்றும், இதுவரை நாட்டை விட்டு வெளியேறாத காரணத்துக்காக உள்ள அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த பண்டிகை காலத்தில், CBP செயலி மூலம் முன்பதிவு செய்து வெளியேறுவதே, சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு உள்ள சிறந்த வாய்ப்பு என்றும், இதனை பயன்படுத்தாதவர்கள், கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவதுடன், அவர்கள் எதிர்காலத்தில் மீண்டும் அமெரிக்காவுக்கு வர முடியாது என்று தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்தாண்டு ஜனவரி முதல் தற்போது வரை, ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் 19 லட்சம் பேர் தாமாக முன்வந்து வெளியேறிவிட்டனர். அதில் ஆயிரக்கணக்கானோர் CBP செயலியில் முன்பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.