இந்திய குடும்பங்களின் வாழ்வில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் அல்ல; தலைமுறை தலைமுறையாக சேர்த்துச் செல்லும் சொத்து. ஒருகாலத்தில் அலங்காரமாக இருந்த மஞ்சள் உலோகம், காலப்போக்கில் பாதுகாப்பான முதலீடாக மாறியது. ஆனால் இப்போது, அந்தத் தங்கமே பலருக்கு எட்டாக்கனியாக மாறி வருகிறது.
இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,02,160 என புதிய வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.12,770-க்கு விற்பனையாகி வருகிறது.

நேற்று ரூ.1,360 உயர்ந்த தங்கம், இன்று மேலும் ரூ.1,600 உயர்வு கண்டுள்ளது. இந்த திடீர் விலை உயர்வு, இல்லத்தரசிகள் மற்றும் நடுத்தர குடும்பங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.57,200-க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம், ஒரே ஆண்டில் ரூ.45 ஆயிரம் உயர்ந்து லட்ச ரூபாய் எல்லையை கடந்துள்ளது. 2024-ம் ஆண்டு முழுவதும் ரூ.12 ஆயிரம் மட்டுமே உயர்ந்த தங்கம், 2025-ல் ஜெட் வேகத்தில் பாய்ந்துள்ளது.தங்கம் மட்டுமல்ல, வெள்ளி விலையும் உச்சத்தில் உள்ளது.
ஒரு கிராம் வெள்ளி ரூ.234, ஒரு கிலோ ரூ.2.34 லட்சம் என புதிய உச்சத்தை தொட்டுள்ளது.நிபுணர்கள் தெரிவித்ததாவது,"உலகப் பொருளாதார நிலையற்ற தன்மை, போர் பதற்றங்கள், அமெரிக்க டாலரின் ஏற்ற இறக்கம், மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகளவில் சேமிப்பது ஆகியவை தங்க விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
குறிப்பாக, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை குவிப்பது விலையை மேலும் தூக்குகிறது.தங்கம் இனி குறையுமா? போர் பதற்றங்கள் தணிந்து, உலக பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டால் விலை உயர்வு மந்தமாகலாம்.
ஆனால், முந்தைய நிலைக்கு விலை திரும்பும் வாய்ப்பு மிகக் குறைவு என்பதே சந்தை நிபுணர்களின் கருத்து.இன்றைய சூழலில், ஒரு பவுன் தங்க நகை செய்கூலி, சேதாரத்துடன் சேர்த்து ஒரு லட்சத்தை நெருங்கியதால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு தங்கம் கனவாகவே மாறியுள்ளது. ஊதியம் உயராத நிலையில், தங்கத்தின் விலை மட்டும் வானளாவ உயர்வது தான் இன்றைய நிதி யதார்த்தம்.