இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உள்நாட்டுத் தேவைகளோடு மட்டுமல்லாமல், உலக நாடுகளின் செயற்கைக்கோள் ஏவுதல்களிலும் தனது திறனை நிரூபித்து வருகிறது. அந்த வரிசையில், அமெரிக்காவின் ஏ.எஸ்.டி. தொலைதொடர்பு நிறுவனத்திற்கு சொந்தமான புளூபேர்ட்–6 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தி, உலக கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த செயற்கைக்கோளின் முக்கிய சிறப்பு என்னவென்றால், விண்வெளியில் இருந்து நேரடியாக ஸ்மார்ட் போன்களுக்கே அதிவேக இணைய சேவையை வழங்கும் திறன் ஆகும். இதன் மூலம் செல்போன் டவர்கள் எட்டாத அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகள், தொலைதூர கிராமங்கள் போன்ற இடங்களிலும் 5ஜி வேகத்தில் இணையம், வீடியோ அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி சேவைகள் கிடைக்கவிருக்கின்றன.
சுமார் 6,100 கிலோ எடை கொண்ட இந்த மிகப்பெரிய புளூபேர்ட்–6 செயற்கைக்கோள், இஸ்ரோவின் கனரக ராக்கெட்டான எல்.வி.எம்.3 – எம்.6 (பாகுபலி) மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, இன்று காலை 8.55 மணிக்கு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஏவுதல் நிகழ்ந்தது.
இதன் மூலம் 6,100 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய முதல் இந்திய அமைப்பாக இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. இதற்கு முன், இவ்வளவு அதிக எடைகொண்ட செயற்கைக்கோள்கள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏவப்பட்டு வந்த நிலையில், இப்போது அந்த உயரத்தை இஸ்ரோ தன் சொந்த மண்ணிலேயே எட்டியுள்ளது.
இந்த வெற்றியானது, இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்ப திறனை உலக அரங்கில் மேலும் உயர்த்தியுள்ளதுடன், எதிர்காலத்தில் உலகளாவிய தகவல் தொடர்பு புரட்சிக்கு புதிய பாதையைத் திறந்துள்ளது