ஊட்டியில் உறைபனி : சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை..!!
Top Tamil News December 25, 2025 12:48 PM

நீலகிரி மாவட்டத்தில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் குளிர்காலம் நிலவுகிறது. நவம்பர் மாதத்தில் நீர் பனிப்பொழிவும், அதைத்தொடர்ந்து உறைபனி தாக்கமும் இருப்பது வழக்கம். கடந்த சில வாரங்களாக புயல் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. அதோடு மேகமூட்டத்துடன் கூடிய சீதோஷ்ண காலநிலை நிலவி வந்ததாலும், பனியின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

இதனையடுத்து ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக உறை பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் வழக்கத்தை விட குளிர் அதிகமாக இருக்கிறது. தேயிலை தோட்டங்கள், புல்வெளிகள், மேரக்காய் பந்தல்களின் மேல் பகுதி முழுவதும் உறைபனி கொட்டி படிந்து இருந்ததால், பச்சை நிறத்தில் இருந்த அவை வெள்ளை போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கின்றன.

மேலும் வாகனங்களின் மேல் உறைபனி கொட்டி இருப்பதை காண முடிந்தது. காலை 8 மணியாகியும் வெயில் வந்தும் கூட உறைபனி ஆவியாகாமல் இருக்கிறது. உறைபனி கொட்டி வருவதால் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்லும்போது கம்பளி ஆடைகளை பயன்படுத்தி வருகின்றனர். ஊட்டியில் நிலவும் உறைபனியை அனுபவிக்க அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஊட்டி உறைபனியை காண செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.