உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் தொடர்பான நிகழ்ச்சிகளும், அலங்காரப் பொருட்கள் விற்பனையும் தீவிரமடைந்துள்ளது.
இந்தச் சூழலில், ஒடிசா மாநிலத்தில் தெருவோரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர்பான கிறிஸ்தவப் பொருட்களை விற்பனை செய்து வந்த வியாபாரிகளை, ஒரு கும்பல் மிரட்டி அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “இது இந்து ராஷ்டிரம்; இங்கே கிறிஸ்தவப் பொருட்களை விற்கக் கூடாது” என்று அந்த கும்பல் மிரட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வீடியோ வெளியாகியதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பலரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத நல்லிணக்கத்தை பாதிக்கும் இத்தகைய சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.