மதுரை திருமங்கலத்தை அடுத்த சிவரக்கோட்டை பகுதியில் ரூ.27 கோடி மதிப்பீட்டிலும், கள்ளிக்குடி பகுதியில் ரூ.29 கோடி மதிப்பீட்டிலும் நடைபெற்று வரும் பாலம் கட்டும் பணிகளை, விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மதுரையில் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம், வரும் ஜனவரி மாதத்தில் மாற்றப்பட உள்ளது. மேலும், வெளிப்புற நோயாளிகள் பிரிவு மற்றும் பெண்கள் விடுதி கட்டுமானப் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளோம்” என்றார்.
மத்திய அரசின் திட்டப்பணிகள் மிகவும் தொய்வாக நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டிய அவர், “மதுரைக்கு வரவேண்டிய மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்” என்று தெரிவித்தார்.
மேலும், “தமிழகத்தில் பா.ஜனதாவால் காலூன்ற முடியாத நிலை இருப்பதால், அந்த கட்சி தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கை கடைப்பிடித்து வருகிறது. திருப்பரங்குன்றத்தில் பா.ஜனதாவினர் சமூக அமைதியை குலைக்க முயற்சி செய்து வருகின்றனர்” என அவர் குற்றம் சாட்டினார்.
அ.தி.மு.க. குறித்து பேசிய அவர், “அ.தி.மு.க. பா.ஜனதாவின் கைக்கூலிகளாக செயல்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றம் மக்கள், அ.தி.மு.க.வை எப்போதும் மன்னிக்க மாட்டார்கள்” என்று கூறினார்.