தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமார், நூறுநாள் வேலைத் திட்டம், அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு மற்றும் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: “நூறுநாள் வேலைத் திட்டத்தை சிதைப்பதற்கான எந்த முயற்சியும் இல்லை. வேலை இல்லாத இடத்தில் வேலை செய்ததாகக் காட்டி இலவசமாக பணம் வழங்கக் கூடாது என்பதையே கூறுகின்றனர்.
தி.மு.க. எந்த நலத்திட்டத்தையும் முழுமையாக வரவேற்பதில்லை. தங்களுக்கு சாதகமாக இருக்கும் திட்டங்களில் தங்களது பெயரை இணைத்துக் கொள்கின்றனர். பாதகமாக இருக்கும் விஷயங்களை குற்றச்சாட்டுகளாக முன்வைக்கின்றனர்.
இன்னும் தேர்தலை சந்திக்காத புதிய அரசியல் கட்சிதான் தமிழக வெற்றிக் கழகம். தற்போது தான் அவர்கள் அரசியல் களத்திற்கு வந்துள்ளனர். தங்களது கொள்கை, கோட்பாடுகளை மக்களிடம் எடுத்துச் சொல்லாமல், தொடர்ந்து தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்குப் பிறகுதான் அவர் உண்மையில் கட்சியை நடத்துவாரா, இல்லையா என்பது தெரியவரும்.
ஒரு பெண் நிர்வாகி கேள்வி கேட்கும்போது வாகனத்தை நிறுத்தி, இறங்கி பேசுபவர்தான் கதாநாயகனாகவும், தலைவனாகவும் இருக்க முடியும். அப்போது இறங்கி பேசியிருந்தால், இன்று அவர் தூக்கமாத்திரை சாப்பிடும் நிலை ஏற்பட்டிருக்காது. தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, வரவிருக்கும் தேர்தலில் பிரதிபலிக்கும்” என்றார். பின்னர், பாஜக தேர்தல் கூட்டணி தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சரத்குமார்,
“சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், மாநிலத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து முடிவு செய்யப்படும்” என தெரிவித்தார்.