திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், தன்னுடன் படித்த மாணவியிடம் காதல் நாடகமாடி பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளான்.
ஆரம்பத்தில் அன்பாகப் பேசி மாணவியின் நம்பிக்கையைப் பெற்ற அந்த மாணவன், தனது பணத் தேவைக்காக மாணவியிடம் நகைகளைக் கேட்டுள்ளார்.
காதலனின் பேச்சை நம்பிய அந்த மாணவி, தான் அணிந்திருந்த கம்மல், செயின் எனச் சிறுகச் சிறுக நகைகளைக் கொடுத்துள்ளார். மாணவி வேறு பள்ளிக்கு மாற்றப்பட்ட பிறகும், விடாமல் துரத்திய அந்த மாணவன், மாணவியின் வீட்டில் இருந்த நகைகளையும் கொண்டு வருமாறு கட்டாயப்படுத்தியதுதான் இந்தச் சம்பவத்தின் உச்சக்கட்டம்.
வீட்டில் உள்ள நகைகளை எடுக்க மாணவி மறுத்தபோது, “நமது காதல் விவகாரத்தை உன் பெற்றோரிடம் சொல்லிவிடுவேன்” என அந்த மாணவன் மிரட்டியுள்ளான்.
இந்த மிரட்டலுக்குப் பயந்த மாணவி, வீட்டில் இருந்த 15 பவுன் தங்க நகைகளை எடுத்து வந்து கொடுத்துள்ளார். வீட்டில் நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகளிடம் விசாரித்தபோதுதான் இந்த ‘நாடகக் காதல்’ விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், நகைகளைப் பறித்த மாணவன் மற்றும் அவனுக்குத் துணையாக இருந்த மற்றொரு மாணவன் என இருவரையும் போலீஸார் அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.