அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,“நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளால் ஆட்சியில் அமர்ந்த விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு, கடந்த 55 மாதங்களாக மக்களின் அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்யாமல் வெறும் விளம்பர அரசியலில் ஈடுபட்டு வருகிறது” என கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

இராமநாதபுரம் நகராட்சியில் நிலவும் சுகாதார சீர்கேடு, கழிவுநீர் பிரச்சினை, சேதமடைந்த சாலைகள், குடிநீர் கலப்பு, பேருந்து நிலைய கடை ஒதுக்கீட்டில் முறைகேடு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வசதியின்மை, அம்மா உணவகம் மூடல் போன்றவை மக்களை கடும் அவதிக்குள்ளாக்கியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
மக்கள் நலனில் அக்கறையற்ற திமுக அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, மக்களின் அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி,30.12.2025 செவ்வாய்கிழமை காலை 10.30 மணிக்கு இராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் எதிரில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ., முன்னாள் பிரதிநிதிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.