பாமக யாருடன் கூட்டணி…. அன்புமணி கொடுத்த விளக்கம்!
TV9 Tamil News December 28, 2025 08:48 AM

இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் திமுக அரசை எதிர்த்து அன்றாடம் பல்வேறு வகையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில், தூய்மை பணியாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். திமுக அரசு அளித்த வாக்குறுதிகளில் 13 சதவீதம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால், அதிருப்தி அடைந்த தமிழக மக்கள் திமுகவுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளனர். வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக படு தோல்வி அடையும். தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேளாண் துறை வளர்ச்சி குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு மைனஸ் 3.8 சதவீதமாக இருந்த வேளாண் துறை வளர்ச்சி இந்த ஆண்டு மைனஸ் 1.8 சதவீதமாக குறைந்துள்ளது.

அதிக கடன் வாங்கு மாநிலங்களில் தமிழகம் முதலிடம்

இயற்கை சீற்றங்களால் சேதமடைந்த விவசாய பயிர்களுக்கு தற்போது வரை இழப்பீடு வழங்கப்படவில்லை. தமிழக அரசு ரூ. 9 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளது. அதிக கடன் வாங்கும் மாநிலமாகவும், அதிக வட்டி செலுத்தும் மாநிலமாக (ஆண்டுக்கு 62 ஆயிரம் கோடி) தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரிக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஆண்டிப்பட்டியில் நிச்சயம் போட்டி.. தை மாதம் கூட்டணி முடிவு வெளியாகும் – டிடிவி தினகரன் திட்டவட்டம்..

69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும்

தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பை மேற்கொண்டு 69 சதவீத இட ஒதுக்கீடை பாதுகாக்க வேண்டும். 365 சமுதாயங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். பீகார், கர்நாடகம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களில் சமூக நீதி கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் சமூக அநீதி கடைப்பிடிக்கப்படுகிறது. திமுகவின் கடைசி ஆட்சி காலத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட திட்டங்களை அறிவித்து நல்லது செய்ய வேண்டும்.

தமிழகத்தில் ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதனை தமிழக அரசு மதிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லாத சூழலை உருவாக்க வேண்டும். சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பாமகவின் கூட்டணி நிலைப்பாடு

தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் 2 மாதங்கள் உள்ளது. எனவே, பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டணி குறித்த நிலைப்பாட்டை மிக விரைவில் அறிவிப்போம். மிகப்பெரிய அளவிலான பலமான கூட்டணி அமைய உள்ளது. இந்த கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு.. இன்றும், நாளையும் சிறப்பு முகாம்..

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.