தமிழக அரசியலில் பரபரப்பு..! நேருக்கு நேர் ஓப்பன் சேலஞ்ச்… முதல்வர் ஸ்டாலின் vs இபிஎஸ்… அதிமுக திமுக இடையே வார்த்தை போர்..!!
SeithiSolai Tamil December 28, 2025 03:48 PM

கள்ளக்குறிச்சியில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டபோது, “சொல்ல சொல்ல மூச்சு வாங்குகிறது” என கூறினார். மேலும், “இவ்வளவு பெரிய சாதனைகளில் 5 சதவீதமாவது அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்ததா? தைரியம் இருந்தால் சொல்லுங்கள். இது என்னுடைய ஓபன் சேலஞ்ச்” என சவால் விடுத்தார்.

“10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் பாழடைந்த தமிழ்நாடு, திமுக ஆட்சியில் தான் எழுச்சி கண்டுள்ளது” என்றும் அவர் விமர்சித்திருந்தார். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினின் விமர்சனத்துக்கும், ஓபன் சேலஞ்சுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) சமூக வலைதளத்தில் நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “நேற்று கள்ளக்குறிச்சியில் மேடை ஏறி ஓபன் சேலஞ்ச் விடுத்த பொம்மை முதல்வரே… நீங்கள் பேசிய அந்த கள்ளக்குறிச்சி மாவட்டமே, எனது தலைமையிலான அதிமுக ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “நீங்கள் நின்று பேசிய கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியே, அதிமுக ஆட்சியின் சாதனை என்ன என்பதை சொல்லும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, “அதிமுக ஆட்சியில் உருவான திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி, ஸ்டிக்கர் ஒட்டுவதையே தங்களின் 95 சதவீத வேலையாகக் கொண்ட நீங்கள், 5 சதவீத திட்டங்கள் குறித்து கேள்வி கேட்க உங்களுக்கு தகுதி இருக்கிறதா?” என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு சீர்குலைந்துள்ளதாகவும், ஆசிரியர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு திமுக அரசு தள்ளிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கிய திட்டம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பி, “எத்தனை லேப்டாப் உண்மையில் மாணவர்களுக்கு சென்றது? தேர்தல் பயத்தால் நான்கரை ஆண்டுகள் வழங்காமல் இருந்து, தற்போது அவசர கதியில் அரைகுறையாக வழங்குவதை பெருமை பேசுவது சரியா?” என விமர்சித்துள்ளார்.

மேலும், “இன்றைக்கு செல்போன் ரீசார்ஜ் செய்தாலே ஓராண்டு முழுவதும் ஏஐ சந்தா இலவசமாக கிடைக்கும் நிலையில், 6 மாதங்களுக்கு மட்டுமே ஏஐ சந்தா வழங்குவதாக கூறுவது பெரிய ஏமாற்று வேலை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பட்டியலிட்டுள்ள சாதனைகள், “அரசு நடத்திய போட்டோ ஷூட்களின் பட்டியலே” என்றும் விமர்சித்துள்ள எடப்பாடி பழனிசாமி, “திமுக தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனையை நிறைவேற்றினீர்கள் என்பதை இதேபோல் வாசிக்கத் தயாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இறுதியாக, “பல ஆண்டுகளாக நான் வைத்துள்ள ஓபன் சேலஞ்ச் இன்னும் நிலுவையில் உள்ளது. என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? அதிமுக ஆட்சி குறித்து நீங்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல நான் தயார். திமுக ஆட்சி குறித்து நான் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லத் தயாரா?” என எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.