புதுச்சேரி கடற்கரையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுக்க முயன்றபோது, பாறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட உதவி பேராசிரியை ஒருவரை மீட்புப் படையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்டனர். மதுரையைச் சேர்ந்த வைஷ்ணவி (26) என்ற பெண், சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.
இவர் தனது நண்பர்களுடன் புதுச்சேரிக்குச் சுற்றுலா சென்றிருந்தபோது, பாண்டி மெரினா கடற்கரையில் உள்ள பாறைகளின் மீது ஏறி ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் சறுக்கி விழுந்ததில், சுமார் அரை டன் எடை கொண்ட பாறையின் இடுக்கில் அவரது இடுப்பு மற்றும் கால் பகுதி சிக்கிக்கொண்டது.
மேலும் சுமார் 10-க்கும் மேற்பட்ட நண்பர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் முயன்றும் அவரை மீட்க முடியாத நிலையில், தீயணைப்புத் துறை மற்றும் பேரிடர் மீட்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர், கிரேன் உதவியுடன் அந்தப் பெரும் பாறையை மெல்ல நகர்த்தி வைஷ்ணவியை பத்திரமாக மீட்டனர்.
இந்நிலையில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே இது போன்ற சமூக வலைதள மோகத்தில் சிக்கித் தங்கள் உயிரைப் பணயம் வைப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.