பொங்கல் நாளில் நடைபெறவிருந்த சிஏ தேர்வு தேதி மாற்றம் – சு.வெங்கடேசன் கருத்து
TV9 Tamil News December 29, 2025 12:48 PM

சென்னை, டிசம்பர் 28 : பொங்கல் (Pongal) பண்டிகை நாளில் நடைபெறவிருந்த சிஏ தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ள நிலையில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார். இந்த தேர்வு தேதி மாற்றம், ஜனவரி 15, 2026 அன்று மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ள மாநகராட்சி தேர்தலை கருத்தில் கொண்டு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஐசிஏஐ சார்பில்,  2026 ஆம் ஆண்டு ஜனவரி 15, 16, 17 தேதிகளில் சிஏ இடைநிலை மற்றும் இறுதி தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

பொங்கலன்று தேர்வு அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சி

அன்றைய தினம் பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் என தமிழர்களால் கொண்டாடப்படும் முக்கியமான நாள்கள் என்பதால் இந்த அறிவிப்பு தமிழகத்தை சேர்ந்த தேர்வகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்கள் குடும்பத்தோடு பொங்கல் கொண்டாட முடியாத நிலை ஏற்படுவதாகவும் சிஏ தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என மக்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இதையும் படிக்க : தைப்பூசம்: மேல்மருவத்தூரில் 57 எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல ஏற்பாடு.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

சு.வெங்கடேசன் எக்ஸ் பதிவு

பொங்கல் அன்று அறிவிக்கப்பட்டிருந்த சி. ஏ. (இண்டர்) தேர்வுகள் தள்ளி வைப்பு.

இது சம்பந்தமாக இந்தியப் பட்டயக் கணக்காளர் கழகத்திற்கு டிச:18 அன்று கடிதம் எழுதியிருந்தேன்.

இந்நிலையில் ஜனவரி 15 அறிவிக்கப்பட்டிருந்த தேர்வு ஜன 19 அன்று மாற்றப்பட்டுள்ளது.

மாற்றியதற்கு வேறு காரணத்தை… pic.twitter.com/YI9oTjmeg0

— Su Venkatesan MP (@SuVe4Madurai)

இந்த விவகாரம் தொடர்பாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன், ஐசிஏஐ  தலைவர் சரண் ஜோத் சிங் நந்தாவுக்கு கடந்த டிசம்பர் 18, 2025 அன்று கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள் ஆகிய முக்கியமான நாள்களில் தேர்வுகளை அறிவித்திருப்பது தேர்வர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தும். இது குறித்து பல்வேறு மாணவர்கள் என்னிடம் முறையீடு செய்துள்ளனர். எனவே, இந்த பண்டிகை நாள்களில் அறிவிக்கப்பட்ட தேர்வுகளை வேறு தேதிகளுக்கு மாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார்.

இதையும் படிக்க :எஸ்ஐஆர்: 1,255 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமனம்.. 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ்!

சிஏ இடைநிலைத் தேர்வு தேதி மாற்றம்

இதனைத் தொடர்ந்து, ஜனவரி 15, 2026 அன்று நடைபெறவிருந்த சிஏ இடைநிலை தேர்வு, ஜனவரி 19, 2026 அன்று மாற்றப்படுவதாக ஐசிஏஐ அறிவித்துள்ளது. இந்த தேதி மாற்றம், ஜனவரி 15, 2026 அன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறவுள்ள மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டுகளை பயன்படுத்தியே தேர்வர்கள் இந்த தேர்வை எழுதலாம் என்றும், மற்ற அனைத்து தேர்வுகளும் முன்பே அறிவிக்கப்பட்ட கால அட்டவணைப்படியே நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பொங்கல் நாளில் அறிவிக்கப்பட்டிருந்த சிஏ தேர்வுகள் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து நான் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி ஐசிஏஐக்கு கடிதம் எழுதியிருந்தேன். இந்நிலையில், ஜனவரி 19, 2026 அன்று மாற்றப்பட்டுள்ளது. மாற்றத்திற்காக அவர்கள் கூறியுள்ள வேறு காரணத்தை வைத்து அவர்கள் ஆறுதல் அடைந்து கொள்ளட்டும். நன்றி” என தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.