கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் வசித்து வந்த இளம்பெண் மற்றும் அவரது சிறுமி சகோதரியை காதல் வலையில் வீழ்த்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக, சுபான்ஷி சுக்லா (27) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அதே பகுதியில் வசித்து வந்த சுபான்ஷி சுக்லாவுக்கும், அந்த குடும்பத்தின் சிறுமிக்கும் முதலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்த அவர், குடும்பத்தினருடன் நெருங்கிய பழக்கம் ஏற்படுத்திக் கொண்டார். அதன் பின்னர், அந்த வீட்டின் இளம்பெண்ணுடன் காதல் உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர், மும்பையில் வேலை கிடைத்துள்ளதாக கூறி இளம்பெண்ணை அங்கு அழைத்துச் சென்ற சுபான்ஷி சுக்லா, திருமணம் செய்யாமலேயே இருவரும் கணவன்–மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். அப்போது தான், சுபான்ஷி சுக்லாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது இளம்பெண்ணுக்கு தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து கேட்டபோது, முதல் மனைவியை விவாகரத்து செய்து உன்னை திருமணம் செய்து கொள்வதாக சுபான்ஷி சுக்லா உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை இளம்பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில், தலைமறைவாக இருந்த சுபான்ஷி சுக்லாவை போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யும் முன்பே, அவரது சிறுமி சகோதரியையும் சுபான்ஷி சுக்லா பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியிருப்பது தெரிய வந்தது. இது குறித்து வெளியே சொன்னால், சிறுமியையும் குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும், இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவரிடமிருந்து சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தையும் மோசடியாக பெற்றுக் கொண்டதும் தெரியவந்துள்ளது. அந்த நகைகள் மற்றும் பணத்தை மீட்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த சகோதரிகள் மட்டுமின்றி, மேலும் சில பெண்களையும் காதல் வலையில் வீழ்த்தி சுபான்ஷி சுக்லா மோசடி செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.