‘அலைகள்’ சீரியல் மூலம் அறிமுகமாகி அத்திப்பூக்கள், வள்ளி, குலதெய்வம் எனப் பல தொடர்களில் வில்லியாக நடித்துப் புகழ்பெற்றவர் நடிகை ராணி. தற்போது அவர் மீது கரூரில் ரூ.10 லட்சம் பண மோசடி புகார் எழுந்துள்ளது.
கரூர் ஓட்டல் உரிமையாளர் ஒருவரை ஏமாற்றிப் பணம் பறித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், நடிகை ராணி, அவரது கணவர் உள்ளிட்ட மூன்று பேர் மீது போலீஸார் அதிரடியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திரையில் வில்லியாக மிரட்டியவர், இப்போது நிஜத்திலேயே மோசடி வழக்கில் சிக்கியுள்ளது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட ஓட்டல் உரிமையாளர் அளித்த புகாரில், நடிகை ராணி தன்னிடம் 10 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கியது மட்டுமின்றி, ஒரு கார் மற்றும் 5 சவரன் தங்க நகையையும் வாங்கி ஏமாற்றிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களாகியும் பணத்தையோ, நகையையோ திருப்பித் தராமல் இழுத்தடித்ததால் அவர் காவல் நிலையத்தை நாடியுள்ளார். புகாரை ஏற்ற கரூா் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
நடிகை ராணி மற்றும் அவரது கணவர் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பணத்தை இழந்த ஓட்டல் உரிமையாளரின் இந்த ‘பகீர்’ குற்றச்சாட்டால் கரூரில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.