ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம், பொங்கல் திருநாளை முன்னிட்டு வரும் ஜனவரி 9-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளை அதிரவிட தயாராகியுள்ளது.
விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசி திரைப்படம் என்ற பெருமை பெற்றுள்ளதால், ‘ஜன நாயகன்’ மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தை தொட்டுள்ளது.இதற்கிடையே, சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடத்தப்பட்டது.

உலகின் பல பகுதிகளிலிருந்து குவிந்த விஜய் ரசிகர்களும், திரையுலகப் பிரபலங்களும் கலந்து கொண்டதால், மலேசியா முழுவதும் தளபதி கோஷம் எதிரொலித்தது.இந்த நிலையில், ‘ஜன நாயகன்’ வெளியாக இன்னும் 11 நாட்களே உள்ள சூழலில், கேரளாவில் இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி குறித்த தகவல் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
கேரளாவில் படம் காலை 6 மணிக்கு முதல் காட்சியாக திரையிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக எஸ்.எஸ்.ஆர். எண்டர்டெயின்மென்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“கேரளாவில் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை அதிகாலை 4 மணிக்கு நடத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம்.
ஆரம்பத்தில் அதற்கான அனுமதி தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கிடைத்திருந்தது. ஆனால் தற்போதைய சூழ்நிலை மற்றும் தமிழ்நாட்டில் ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாக, அதிகாலை 4 மணி காட்சிக்கான அனுமதி வழங்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, கேரளாவில் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி காலை 6 மணிக்கு நடைபெறும்.
இதனால் ஏற்பட்ட ஏமாற்றத்திற்காக கேரளாவிலுள்ள அனைத்து தளபதி ரசிகர்களிடமும் எங்களது மனமார்ந்த மன்னிப்பை தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.