தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த துரோனாம்ருஜு ஸ்ரீகாந்த் – விஜயலட்சுமி தம்பதியினருக்கு கடந்த 2002-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னர் ஒரு ஆண்டில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், காலப்போக்கில் கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அடிக்கடி தகராறுகள் உருவாகி, இருவரும் தனித்தனியாக வாழத் தொடங்கினர்.
இந்த நிலையில், 2008-ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகினார். இதற்கு எதிராக, விஜயலட்சுமி தங்கள் குழந்தையின் நலன் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மீண்டும் இணைந்து வாழ விருப்பம் தெரிவித்ததுடன், திருமண உரிமைகளை மீட்டெடுக்க கோரி தனியாக மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த குடும்ப நீதிமன்றம் முதலில் விவாகரத்து வழங்கிய நிலையில், அந்த தீர்ப்பை எதிர்த்து விஜயலட்சுமி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அதன் பின்னர், இந்த வழக்கு பல ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்தாலும், கணவன்–மனைவி இடையே சமாதானம் அல்லது உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.
இந்நிலையில், சுமார் 17 ஆண்டுகளாக நீடித்த இந்த விவாகரத்து வழக்கில் தெலுங்கானா உயர்நீதிமன்றம் தற்போது இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது.
தீர்ப்பில், இந்த தம்பதி மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லாத நிலையில், சட்டபூர்வமான திருமண உறவை தொடர்வதில் எந்த பயனும் இல்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
இதனைத் தொடர்ந்து, இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்ட நீதிபதி, அவர்களின் மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மனைவிக்கு முழு மற்றும் இறுதி ஜீவனாம்சமாக ரூ.50 லட்சம் தொகையை, கணவர் அடுத்த மூன்று மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.