பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி (வயது 90) செவ்வாய்க்கிழமை காலமானார். வயது மூப்பு காரணமாக நீண்ட காலமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், கொச்சி எலமக்கரையில் உள்ள மோகன்லாலின் இல்லத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்த நிலையில் உயிரிழந்தார்.
சாந்தகுமாரியின் கணவர் விஸ்வநாதன் நாயர் ஏற்கனவே காலமானார். மேலும், அவரது மூத்த மகன் பியாரிலால் 2000ஆம் ஆண்டு மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோகன்லால் தனது தாயாருடன் மிக நெருக்கமான உறவைப் பகிர்ந்து கொண்டிருந்தார். திரைத்துறையில் மிகப் பரபரப்பான கால அட்டவணை இருந்தபோதிலும், தாயாரை பராமரிப்பதற்காக அவ்வப்போது நேரம் ஒதுக்கி வந்ததாக கூறப்படுகிறது.
மோகன்லாலின் திரை வாழ்க்கையில் சாந்தகுமாரி குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியவராக இருந்து வந்துள்ளார். இதை நடிகர் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். சமீபத்தில், தாதாசாகேப் பால்கே விருது கிடைத்தபோது, அந்த மகிழ்ச்சியான செய்தியை முதலில் தனது தாயாரிடமே பகிர்ந்து கொண்டதாக மோகன்லால் கூறியிருந்தார்.
மேலும், அந்த உயரிய விருதை தாயாருடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது தனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.