தமிழக அரசின் கடன் சுமை குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்ட கருத்து, திமுக கூட்டணியிலும் தமிழக காங்கிரஸிற்குள்ளும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அவர் புள்ளிவிவரங்களுடன் பதிவிட்டது சர்ச்சையை கிளப்பியது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்து காங்கிரஸின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என்றும், அவர் பாஜகவின் குரலாக பேசுவதாகவும் விமர்சித்துள்ளார். மேலும், சமீபத்தில் அவர் தவெக தலைவர் விஜய்யை சந்தித்ததற்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை எனத் தெளிவுபடுத்தினார்.
ஏற்கனவே காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி மற்றும் சசிகாந்த் செந்தில் ஆகியோரும், தமிழகத்தின் சமூக வளர்ச்சி குறியீடுகளை புறந்தள்ளிவிட்டு வெறும் கடனை மட்டும் ஒப்பிடுவது தவறு என பிரவீன் சக்கரவர்த்திக்கு பதிலடி கொடுத்துள்ளனர். இந்த மோதலை சுட்டிக்காட்டியுள்ள பாஜக, இந்தியா கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில் எழுந்துள்ள இந்த கூட்டணி பூசல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran