ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பையை வெல்வதற்காக நடப்புச் சாம்பியன் இந்திய கிரிக்கெட் அணி முழு வீச்சில் தயாராகி வருகிறது. சொந்த மண்ணில் நடைபெற உள்ள இந்த உலகக் கோப்பையில் மீண்டும் கோப்பையை தக்கவைக்க இந்தியா முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவின் ஃபார்ம் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறினாலும், டி20 போட்டிகளில் அதிரடி ஆட்டத்தால் இந்தியாவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியவர் சூரியகுமார் யாதவ். எங்கு போட்டாலும் அடித்து நொறுக்கும் அவரது பேட்டிங் ஸ்டைல் காரணமாக, ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக உயர்ந்த அவர், “மிஸ்டர் 360 டிகிரி” என்ற அடையாளத்தையும் பெற்றார். இதன் அடிப்படையிலேயே அவருக்கு இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பும் வழங்கப்பட்டது. அவரது தலைமையில் இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று, டி20 தரவரிசையில் நம்பர் ஒன் அணியாகவும் திகழ்ந்து வருகிறது.
ஆனால் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, பேட்டிங்கில் சூரியகுமார் யாதவ் பெரிய ரன்கள் குவிக்கத் தடுமாறி வருவது கவலை அளிப்பதாக கூறப்படுகிறது. கடந்த 12 மாதங்களில் அவர் ஒரு அரைசதம் மட்டுமே அடித்திருப்பது, இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், சூரியகுமாரின் தற்போதைய ஃபார்ம் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய ஸ்ரீகாந்த், “தற்போதைய இந்திய அணியில் எனக்கு அதிகம் கவலையளிப்பது சூரியகுமார் யாதவின் ஃபார்ம்தான். அவர் அதிகமாக கேப்டன்ஷிப் பொறுப்பில் கவனம் செலுத்தி, தனது இயல்பான பேட்டிங்கை புறக்கணிக்கிறார் என நினைக்கிறேன். அது தேவையில்லை” என்றார்.
மேலும், “சூரியகுமார் தன்னுடைய பேட்டிங் இடத்தை அடிக்கடி மாற்றாமல், ஒரு இடத்தில் நிலையாக விளையாட வேண்டும். எடுத்துக்காட்டாக மூன்றாவது இடத்தில் களமிறங்கினால், தொடர்ந்து அதே இடத்தில் விளையாட வேண்டும். டி20 உலகக் கோப்பை நெருங்கி வரும் நிலையில், அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்புவது மிகவும் முக்கியம்” என்று அறிவுறுத்தினார்.
“ஒரு கேப்டனாகவும், ஒரு வீரராகவும் சூரியகுமார் எந்த அணியிலும் இருப்பார். ஆனால் அவரது ஃபார்ம் மட்டும் தற்போது கவலையளிக்கிறது. அவர் அதிகமாக கேப்டன்ஷிப் பற்றி யோசிக்காமல், தனது பேட்டிங்கில் கவனம் செலுத்தினாலே, கேப்டன்ஷிப் தானாகவே சிறப்பாக வரும். ஏனெனில் அவர் இயல்பாகவே ஒரு நல்ல கேப்டன்” என்றும் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
டி20 உலகக் கோப்பையை தக்கவைக்க இந்தியா முனைந்துள்ள இந்த சூழலில், கேப்டன் சூரியகுமார் யாதவ் மீண்டும் தனது அதிரடி ஃபார்முக்கு திரும்புவாரா என்பதே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.