பொங்கல் பரிசுத்தொகுப்பு.. ரூ. 248 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு..
TV9 Tamil News January 01, 2026 06:48 PM

ஜனவரி 1, 2026: 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசு தரப்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பிற்காக ரூபாய் 248 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2026 பொங்கல் பண்டிகை கொண்டாட இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால், தமிழக மக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு எப்படி இருக்கும்? ரொக்கப் பணம் வழங்கப்படுமா அல்லது கடந்த ஆண்டு போலவே இருக்குமா? என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

பொங்கல் பரிசுத்தொகுப்பு:

இந்தச் சூழலில், பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக 248 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக அரசு 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, ஒவ்வொரு பொங்கல் பண்டிகைக்கும் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்காக பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை தமிழர்களுக்கு உரிய பண்டிகை என்பதால், இந்த நாளில் அனைவரும் பொங்கலை கொண்டாட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு தரப்பில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு நியாய விலை கடைகளில் வழங்கப்படுகிறது.

ரூ. 3000 ரொக்கப்பணம்?

2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு, தமிழக அரசு தரப்பில் இந்த ஆண்டு ரொக்கப் பணம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு குடும்ப அட்டைக்கு கிட்டத்தட்ட 3,000 முதல் 4,000 ரூபாய் வரை வழங்கப்படும் என தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளன.

ஆனால், தற்போது வரை இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான பொருட்களை கொள்முதல் செய்வதற்காக ரூபாய் 248 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பச்சரிசி, சர்க்கரை, கரும்பு கொள்முதலுக்கு நிதி ஒதுக்கீடு:

ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்காக இந்தத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்னும் ஓரிரு நாட்களில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கும் பணிகள் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க:`2025-ஆம் ஆண்டின் மிகப்பெரிய பொய் “போதையில்லா தமிழகம்”…பங்கமாய் கலாய்த்த தமிழிசை!

2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் தலா 1,000 ரூபாய் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டது. ஆனால், 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மட்டும் வழங்கப்பட்டு, ரொக்கப் பரிசு வழங்கப்படவில்லை. இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

எனினும், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கக்கூடிய சூழலில், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.