சென்னை, ஜனவரி 1: பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் புதிதாக தயாரிக்கப்படும் இருசக்கர வாகனங்களுக்கு ‘ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்’ கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி இன்று முதல் அந்த வசதி அறிமுகப்படுத்தப்படுகிறதா என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துகளில் சுமார் 44% விபத்துகள் இருசக்கர வாகனங்களால் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் பெரும்பாலான உயிரிழப்புகள் தலையில் ஏற்படும் காயம் மற்றும் பிரேக் பிடிக்கும் போது வாகனம் சறுக்குவதால் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க :Year Ender 2025 : 2025-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 ஏஐ அம்சங்கள்!
ஏபிஎஸ் பிரேக்கிங் (ABS) வசதி கட்டாயம்:அந்த வகையில், மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இருசக்கர வாகன பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் 2026 ஜனவரி 1 முதல் அதாவது இன்று முதல் தயாரிக்கப்படும் அனைத்து புதிய இருசக்கர வாகனங்களிலும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) வசதி கட்டாயமாக இருக்க வேண்டும் என அறிவித்தது. ஏற்கனவே 125cc திறன் கொண்ட பைக்குகளுக்கு மட்டுமே ABS கட்டாயமாக இருந்தது. அதற்கு கீழ் உள்ள வாகனங்களுக்கு காம்பி பிரேக்கிங் சிஸ்டம் (CBS) போதுமானதாக இருந்தது.
ஆனால் தற்போது ஸ்கூட்டர் மற்றும் பைக்குகள் என அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ABS வசதி கட்டாயமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி அவசரமாக பிரேக் பிடிக்கும் போது சக்கரங்கள் லாக் ஆகி வாகனம் சறுக்குவதைக் தடுக்கும். ஈரமான அல்லது மணல் நிறைந்த சாலைகளில் இது உயிர் காக்கும் தொழில்நுட்பமாக செயல்படும் என கூறப்படுகிறது.
இன்று முதல் அமல்படுத்தப்படுகிறதா?இதேபோல், புதிதாக வாகனம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வாகன உற்பத்தியாளர்கள் அல்லது டீலர்கள் கட்டாயமாக 2 தலைக்கவசங்களை (ஹெல்மெட்) வழங்க வேண்டும் என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. அதன்படி இந்த உத்தரவும் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த 2 ஹெல்மெட்டுகளும் கண்டிப்பாக BIS தரச்சான்றிதழ் பெற்றதாக இருக்க வேண்டும். வாகனம் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்லும் பயணி ஆகிய இருவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :Year Ender 2025 : 2025-ல் இந்தியாவில் தலைவிரித்தாடிய சைபர் மோசடிகள்.. கோடி கணக்கில் பணத்தை இழந்த மக்கள்!
இந்த புதிய பாதுகாப்பு அம்சங்களால் இருசக்கர வாகனங்களின் விலையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ABS வசதி மற்றும் கூடுதல் ஹெல்மெட் ஆகியவற்றால் வாகனத்தின் விலை சுமார் ரூ.3,000 முதல் ரூ.10,000 வரை உயரும் வாய்ப்பு உள்ளது. வாகன உற்பத்தி நிறுவனங்கள் இதற்கு அவகாசம் கேட்டிருந்த நிலையில் அரசு இதுவரை வழங்கவில்லை என்றும், அறிவிப்பில் மாற்றங்கள் எதுவும் இல்லை என்றாலும், இதனை அமல்படுத்தும் தேதி தள்ளிப் போகவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.