திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் கட்சி அலுவலகத் திறப்பு விழாவிற்கு வந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை, தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) திடீரென முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளக்கோவிலில் நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடுமையாக உழைத்தவர்களுக்கு, தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் முறையான பதவிகள் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, கட்சியில் பழைய நிர்வாகிகளைப் புறக்கணித்துவிட்டு புதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகத் தவெக தொண்டர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், இன்று அலுவலக திறப்பு விழாவுக்காக வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனைச் சூழ்ந்து கொண்ட தவெகவினர், தங்களுக்கு இளைஞரணி பதவிகளைப் பெற்றுத் தர வேண்டும் எனக் கோரி பதாகைகளை ஏந்தி முறையிட்டனர். இது அங்கு கூடியிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
“கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்த எங்களைப் புறக்கணிப்பது சரியல்ல” என்று கூறி அவர்கள் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கட்சி நிர்வாகிகளும் போலீசாரும் தலையிட்டு அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும், பதற்றமான சூழலும் நிலவியது. மேலும் அதே நேரத்தில் செங்கோட்டையன் கட்சி அலுவலகத்திற்கு வாருங்கள் நாம் பிரச்சனைகளை பேசிக்கொள்ளலாம் என்று கூறி அவர்களை சமாதானப்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.
தங்கள் கட்சித் தலைமை எடுக்கும் முடிவுகளில் அதிருப்தி அடைந்துள்ள தொண்டர்கள், வெளிப்படையாக வீதியில் இறங்கிப் போராடுவது தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சிப் பூசலை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.