திருப்பதியில் நாளை முதல் நேரடியாக இலவச தரிசனம்... வைகுண்ட வாசல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி!
Dinamaalai January 01, 2026 09:48 PM

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், நாளை (ஜனவரி 2, 2026) முதல் நேரடியாக வரும் பக்தர்களுக்கு இலவச தரிசன அனுமதி வழங்கப்பட உள்ளது.  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த டிசம்பர் 30-ம் தேதி திருப்பதியில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முதல் இரண்டு நாட்களில் (ஏகாதசி மற்றும் துவாதசி) மட்டும் சுமார் 1.37 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய இரு தினங்களில் மட்டும் உண்டியல் காணிக்கையாக ரூ. 7.04 கோடி வசூலாகியுள்ளது. சுமார் 41,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாகத் தலைமுடியைக் காணிக்கையாக அளித்துள்ளனர். வைகுண்ட வாசல் தரிசனம் வரும் ஜனவரி 8-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இதுவரை ஆன்லைன் டோக்கன் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், நாளை முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.

நாளை காலை முதல் திருப்பதிக்கு நேரடியாக வரும் பக்தர்கள் எவ்வித டோக்கனும் இன்றி இலவச தரிசன வரிசையில் (Sarva Darshan) நேரடியாக அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 8-ம் தேதி வரை வழங்கப்பட இருந்த நேரடி சர்வ தரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேரடியாக வரிசையில் நின்று மட்டுமே தரிசிக்க முடியும்.

ஒரு நாளைக்கு 15,000 டிக்கெட்டுகள் வீதம் ஏற்கனவே ஆன்லைனில் பதிவு செய்தவர்களும் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களின் கூட்டத்தை முறைப்படுத்தத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்த ஆண்டு அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. வரிசைகள் முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் கூட்டம் எவ்வளவு உள்ளது என்பதைத் துல்லியமாகக் கணக்கிட முடியும்.

பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்பது அங்கிருக்கும் டிஜிட்டல் திரைகளில் (Display) அவ்வப்போது அறிவிக்கப்படும். நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்குப் பால், காபி, தேநீர் மற்றும் அன்னப்பிரசாதம் தடையின்றி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று இரவு முதலே இலவச தரிசன வரிசைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், தரிசன நேரத்தை முன்கூட்டியே அறிந்து கொண்டு தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.