நீங்கள் வாகனம் வைத்திருப்பவர் என்றால், உங்கள் செல்போனுக்கு வரும் ‘இ-சலான்’ குறுஞ்செய்திகள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தற்போது போக்குவரத்து விதிமீறல் அபராதம் என்ற பெயரில் பொதுமக்களின் வங்கி கணக்குகளை திருடும் புதிய வகை மோசடி அரங்கேறி வருகிறது.
இந்த மோசடி எப்படி நடக்கிறது?
மோசடி செய்பவர்கள், போக்குவரத்து துறையிலிருந்து வருவது போலவே போலியான குறுஞ்செய்திகளை உங்களுக்கு அனுப்புவார்கள். அதில், நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறிவிட்டதாகவும், அதற்கான அபராத தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கும். அபராதத்தை செலுத்த ஒரு இணையதள இணைப்பும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும்.
அந்த இணைப்பை நீங்கள் கிளிக் செய்தால், அது அச்சு அசலாக அரசு இணையதளம் போலவே தோற்றமளிக்கும் ஒரு போலி தளத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். அங்கு உங்கள் வண்டி எண், வங்கி விவரங்கள் அல்லது கிரெடிட்/டெபிட் கார்டு விவரங்களை உள்ளிடும்போது, அந்த தகவல்கள் மோசடி கும்பலுக்கு சென்றுவிடும்.
சில நேரங்களில், அந்த லிங்கை கிளிக் செய்தாலே உங்கள் செல்போன் அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும். இதன் மூலம் உங்கள் ரகசிய தகவல்கள் மற்றும் வங்கி கணக்கில் உள்ள பணம் திருடப்பட வாய்ப்புள்ளது.
எனவே குறுஞ்செய்திகளில் வரும் எந்த ஒரு சந்தேகத்திற்குரிய இணைப்புகளையும் கிளிக் செய்யாதீர்கள். அரசு இணையதளங்கள் எப்போதும் ‘.gov.in’ என்றே முடியும். இதை தவிர வேறு விதமாக முடியும் தளங்களைத் தவிர்க்கவும்.
போக்குவரத்து போலீசார் ஒருபோதும் உங்களின் OTP, PIN எண் அல்லது வங்கி விவரங்களை கேட்க மாட்டார்கள். இவற்றை யாரிடமும் பகிர வேண்டாம்.
அபராதம் இருப்பதாக செய்தி வந்தால், முதலில் அதிகாரப்பூர்வ செயலியில் அல்லது இணையதளத்தில் நேரடியாக சென்று உங்கள் வண்டி எண்ணை போட்டு உண்மையாகவே அபராதம் விதிக்கப்பட்டுள்ளா என சரிபார்க்கவும்.
ஆன்லைன் மோசடிகளில் இருந்து தப்பிக்க விழிப்புணர்வே மிகச்சிறந்த வழி. உங்களின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாப்பாக வைத்திருங்கள்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
Author: Bala Siva