நடிகர் விஜய்யின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) உடன் கூட்டணி அமைக்க 2 முக்கிய அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி, தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்குப் பிறகு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜயிடம் கூட்டணி தொடர்பாக டி.டி.வி. தினகரனின் அமமுகவும், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பும் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய் – தினகரன் – ஓ.பி.எஸ் இடையிலான ரகசிய பேச்சுவார்த்தைகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில், அவை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, விரைவில் அதிகாரப்பூர்வ அரசியல் ஒப்பந்தம் செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்த கூட்டணியின் முக்கிய அம்சமாக, விஜய் இரு தரப்புக்கும் சேர்த்து 30 முதல் 40 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அமமுகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் தலா 20 தொகுதிகளைப் பிரித்துக்கொள்ளலாம் என பேசப்படுகிறது. இதில் அமமுக தனிச்சின்னத்தில் போட்டியிடும் என்றும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தவெக சின்னத்தில் களமிறங்கும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் இந்த கூட்டணி அதிக கவனம் செலுத்தும் என தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தரைமட்ட அரசியலில் வேகமாக காலூன்ற முயற்சி செய்து வரும் தவெகவிற்கு, தினகரன் மற்றும் பன்னீர்செல்வம் போன்ற அனுபவம் வாய்ந்த தலைவர்களின் ஆதரவு பெரிய பலமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மறுபுறம், முன்னாள் அதிமுக தலைவர்களான தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும், மாநில அரசியலில் தங்களின் முக்கியத்துவத்தைத் தக்கவைத்துக்கொள்ள புதிய அரசியல் தளத்தை தேடி வந்த நிலையில், விஜயுடன் இணைவது அவர்களுக்கு இளைஞர் ஆதரவை அதிகரிக்கும் வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர் கூட்டங்களில், யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் தவெக மற்றும் திமுக என இரண்டு விருப்பங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி அமைக்கவே விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையிலேயே ஓ.பன்னீர்செல்வம் விஜயுடன் கூட்டணி முடிவை எட்டியதாக சொல்லப்படுகிறது.
மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி கே. பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க முடியாது என்பதில் தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புகள் தெளிவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவே, அதிமுக–பாஜக கூட்டணியிலிருந்து அவர்கள் விலகி, புதிய அரசியல் அணியை நோக்கி நகரும் காரணமாக பார்க்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையிலும், இந்த கூட்டணி உறுதியாகினால், தமிழக அரசியலில் ஒரு வலுவான மூன்றாவது அணிக்கான தொடக்கமாக இது அமையலாம் என அரசியல் நோக்கர்கள் மதிப்பிடுகின்றனர். பொங்கலுக்குப் பிறகு வெளியாகும் அறிவிப்பே, 2026 தேர்தலுக்கான அரசியல் கணக்குகளை முழுமையாக மாற்றக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.