புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, 2026 சட்டமன்றத் தேர்தல், கூட்டணி அரசியல் மற்றும் எதிர்க்கட்சிகள் குறித்து தெளிவான கருத்துகளை முன்வைத்தார்.
அப்போது அவர் தெரிவிக்கையில்," 2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட வேண்டுமா, அல்லது அவரவர் கட்சி சின்னத்தில் களமிறங்க வேண்டுமா என்பது கூட்டணி தலைமையே முடிவு செய்ய வேண்டிய விஷயம் எனத் தெரிவித்தார்.

2021 தேர்தலில் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்ட பல கூட்டணி கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வரும் சூழ்நிலையில், இந்த விஷயத்தை கூட்டணி தலைமை கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து பேசிய துரை வைகோ, “விஜய்க்கு தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. அதனால் சில அளவிற்கு வாக்குகள் பிரியலாம். தி.மு.க.வுக்கு மாற்று நாங்கள்தான் என்று அவர் கூறுவது அவரது ஜனநாயக உரிமை. ஆனால் எங்களைப் பொறுத்தவரை, மற்ற கட்சிகளை பெரிதாக பொருட்படுத்தவில்லை. தி.மு.க. கூட்டணிக்கு அவரது வருகையால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது” எனத் தெரிவித்தார்.
மேலும், 2026 தேர்தலில் 10 தொகுதிகள் வேண்டும் என்று வைகோ கேட்டதாக பரவும் தகவல்கள் உண்மையற்றவை என மறுத்த அவர், இருப்பினும் கூடுதல் தொகுதிகள் கேட்பது இயல்பான அரசியல் நடைமுறை என்றும் கூறினார்.
பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “அண்ணாமலை – துரை வைகோ ஆட்டத்தை இனி தான் பார்க்கப் போகிறீர்கள்” என்று கூறியிருந்ததற்கு பதிலளித்த துரை வைகோ,“அண்ணாமலை ஆடிய ஆட்டத்தை கடந்த தேர்தலிலேயே பார்த்துவிட்டோம்.
பா.ஜனதா தனித்து போட்டியிட்டால், அவர்களின் உண்மையான வாக்கு சதவீதம் என்ன என்பதும் வெளிச்சத்திற்கு வரும்” எனக் கடுமையாக விமர்சித்தார்.இவ்வாறு அவரது பேட்டி, 2026 தேர்தல் அரசியலில் கூட்டணி கணக்குகள் மேலும் தீவிரமடைவதை சுட்டிக்காட்டுவதாக அமைந்தது.