திருப்பத்தூர் மாவட்டம் சின்ன கசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேடி (59). இவரது மனைவி மற்றும் மூத்த மகன் சென்னையில் வசித்து வரும் நிலையில், இரண்டாவது மகன் மேகநாதன் திருப்பூரில் இருந்து வந்து தந்தையை கவனித்துக்கொண்டார்.
சமீபத்தில் மேகநாதன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வங்கிப் பணிகளுக்காக தற்காலிகமாக திருப்பூர் சென்றார். ஆனால், தன்னை மீண்டும் தனியாக விட்டுவிட்டு அனைவரும் சென்றுவிட்டதாகத் தவறாகக் கருதிய வேடி, சாப்பாட்டிற்கு வழியில்லை என்ற மனவேதனையில் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு காது, மூக்கு, தொண்டை நிபுணர் டாக்டர் விக்னேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர், பல மணி நேரம் போராடி தீவிர அறுவை சிகிச்சை செய்து வேடியின் உயிரைக் காப்பாற்றினர்.
தகவலறிந்து வந்த அவரது மருமகள் சீதா, தனது மாமனாரை மறுபிறவி எடுக்க வைத்த அரசு மருத்துவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.