தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பிற்காக 248 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள நிலையில், பரிசுக்கான டோக்கன்களை விநியோகிப்பதில் கூட்டுறவுத்துறை சில முக்கியமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, அரசியல் கட்சியினரோ அல்லது ரேஷன் கடையைச் சாராத வெளிநபர்களோ பொங்கல் பரிசு டோக்கன்களை வழங்கக்கூடாது என்றும், ரேஷன் கடைப் பணியாளர்கள் மட்டுமே நேரடியாகக் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்குச் சென்று டோக்கன்களை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ளவர்களுக்கும் இந்தத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஜனவரி 2-ஆம் தேதிக்குள் டோக்கன்களை விநியோகிக்கத் தயாராக இருக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க சுழற்சி முறையில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. முதல் நாளில் முற்பகலில் 100 பேருக்கும், பிற்பகலில் 100 பேருக்கும் என பிரித்து வழங்கப்பட வேண்டும். அதிக எண்ணிக்கையிலான குடும்ப அட்டைகள் கொண்ட கடைகளில் கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும், தேவைப்பட்டால் பாதுகாப்புக்காகக் காவல் துறையினரின் உதவியைப் பெறவும் அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும், வழங்கப்படும் பொருட்கள் தரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்குக் கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.