ஆன்மீகம் அறிவோம் : வெளிநாடு போகிற கனவு இருக்கா..? உங்கள் கனவை நிஜமாக்கும் சிவன் கோவில்..!!
Top Tamil News January 02, 2026 11:48 AM

சென்னையிலிருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள படூரில் வரலாற்றுச் சிறப்புமிக்க மணிகண்டீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பல்லவ மற்றும் சோழ மன்னர்களால் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்ட இக்கோவில், ஒரு காலத்தில் சைவ மற்றும் வைணவ வழிபாட்டுத் தலங்களின் சங்கமமாகத் திகழ்ந்தது. அந்நியப் படையெடுப்புகளால் சிதிலமடைந்திருந்த இக்கோவிலை, 1992-ஆம் ஆண்டு கிருஷ்ணவேணி அம்மையார் என்ற சிவத்தொண்டரின் தீவிர முயற்சியால் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோவில் வளாகம் மூன்று முக்கியப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இதன் தனிச்சிறப்பாக, இடதுபுறம் ஐயப்பன் கோவிலும், வலதுபுறம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலும் அமைய, இவற்றின் நடுவே முதன்மைத் தெய்வமான மணிகண்டீஸ்வரர் வீற்றிருக்கிறார். மகா மண்டபத்தில் மரகதவல்லி தாயார் சன்னதியும், கருவறைக்கு முன்பாக விநாயகர் மற்றும் முருகப்பெருமான் சன்னதிகளும் அமைந்துள்ளன.

கோவிலைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை மற்றும் சோழர் காலத்துச் சண்டிகேஸ்வரர் ஆகியோரின் திருமேனிகள் அமையப் பெற்றுள்ளன. இவை தவிர, பைரவர், பவானி அம்மன், சூரியன், நந்திதேவர் மற்றும் ஜலகண்டேஸ்வரர் ஆகியோருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. ஆன்மீக ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த இக்கோவில், படூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

பெருமாளின் தலை மீது லட்சுமி :

இக்கோவிலின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இங்குள்ள ஸ்ரீநிவாசப் பெருமான் மகாலட்சுமியை தனது திருமார்பிற்கு பதிலாக தலைமீது வைத்த நிலையிலும், சங்கு மற்றும் சக்கரங்களை திசை மாற்றி வைத்தும் காட்சி தருகிறார். இது போன்ற ஒரு அமைப்பை வேறு எங்கும் காண முடியாது. இங்கு பெருமாள் சன்னதிக்கு எதிரில் தன்வந்திரி பகவானுக்கும் சன்னதி உள்ளது. கொடி மரத்திற்கு அருகே வானத்தை பார்த்தபடி நந்தியோடு இருக்கும் ஜலகண்டேஸ்வரரையும் தரிசிக்க முடியும். இவரை பக்தர்கள் தங்களின் கைகளால் தொட்டு வணங்கலாம். இவரை வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

பழங்காலத்தில் துறைமுகமாக இருந்த இப்பகுதியில் அதிகமான படகுகள் நிறைந்த ஊராக இருந்தால் இப்பகுதி படகூர் என அழைக்கப்பட்டு, பிறகு கால காலப்போக்கில் படூர் என மாறியது. இக்கோவிலின் பிரதான தெய்வமாக விளங்குவது மணிகண்டீஸ்வரர். பழங்காலத்தில் சிறுகாளேஸ்வரமுடைய மகாதேவர், சிறுமண்ணீஸ்வரமுடைய மகாதேவர், திருகாரீஸ்வரமுடைய மகாதேவர் என பல பெயர்களில் இத்தல இறைவன் அழைக்கப்பட்டுள்ளார். இவரது கருவறைக்கு எதிரே தென்முகமாக மரகதவல்லி தாயார் நின்ற கோலத்தில் அபய வரத முத்திரையுடன் காட்சி அளிக்கிறாள். மணிகண்டீஸ்வரர் மற்றும் மரகதவல்லி தாயாரை வணங்கினால் திருமணத் தடை நீங்கும். வெளிநாடு செல்லும் விருப்பம் நிறைவேறும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.