போதையில் விமானம் இயக்க வந்த ஏர் இந்தியா விமானி: கனடா அதிகாரிகள் அதிர்ச்சி..!
Seithipunal Tamil January 02, 2026 01:48 PM

கனடாவில் இருந்து இந்தியா கிளம்ப தயாராக இருந்த ஏர் இந்தியா விமானத்தை இயக்க வேண்டிய விமானி போதையில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தை இயக்க வந்த விமானியிடம் இருந்து, ஆல்கஹால் வாசனை வந்ததால் அதிகாரிகள் அவரை பிடித்து வைத்த சம்பவம் கடந்த மாதம் டிசம்பர் 23-ஆம் தேதி நடந்துள்ளது.

கனடாவின் வான்கூவர் நகரில் இருந்து டில்லிக்கு வர இருந்த விமானத்தை குறித்த விமானி இயக்க இருந்தார். இவர் விமான நிலையத்தில் இருந்த கடை ஒன்றில், மதுபானம் வாங்கி அருந்தியதை பார்த்த ஊழியர் ஒருவர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பின்னர்  உடனடியாக அதிகாரிகள் அவரை பிடித்து விசாரித்ததோடு, ப்ரீத் அனாலிசர் சோதனையும் நடத்தினர். அதில் அவர் தோல்வி அடைந்ததால், அவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 

வான்கூவர் நகரில் இருந்து டில்லிக்கு வர வேண்டிய விமானம், கிளம்புவதில் கடைசி நேரத்தில் தாமதம் ஏற்பட்டது. விமானியின் உடல் தகுதியில் கனடா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து விசாரணைக்கு அவரை அழைத்து சென்றனர். 

பாதுகாப்பு வழிமுறைகளை கருத்தில் கொண்டு மாற்று விமானி மூலம் அந்த விமானம் இயக்கப்பட்டது. இதனால், பயணிகளுக்கு ஏற்பட்ட தொந்தரவுக்கு மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளது. மேலும் அந்நாட்டு அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.