திறமைக்கு கிடைத்த மகுடம்..! “கற்பனைக்கு எட்டாத சம்பளம்”… வியக்க வைக்கும் இந்திய மாணவரின் சாதனை… வெளிநாட்டு நிறுவனத்தின் அசத்தல் ஆஃபர்..!!
SeithiSolai Tamil January 02, 2026 02:48 PM

ஐஐடி ஹைதராபாத் கல்வி நிறுவனத்தின் வரலாற்றிலேயே இல்லாத வகையில், இறுதியாண்டு கணினி அறிவியல் மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.2.5 கோடி சம்பளத்தில் வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது.

இது குறித்து கல்வி நிறுவனம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிப்பதாவது: ஹைதராபாத் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IITH) இறுதியாண்டு கணினி அறிவியல் பொறியியல் பயின்று வரும் 21 வயது மாணவர் ஒருவருக்கு, நெதர்லாந்தைச் சேர்ந்த உலகளாவிய வர்த்தக நிறுவனம் இந்த பிரம்மாண்ட வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. 2008-இல் ஐஐடி ஹைதராபாத் தொடங்கப்பட்டதிலிருந்து வழங்கப்பட்ட அதிகபட்ச சம்பளம் இதுவேயாகும். இதற்கு முன்பு 2017-இல் ரூ.1.1 கோடியே அதிகபட்சமாக இருந்தது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்த மாணவர், தனது பள்ளிப் படிப்பை பெங்களூருவில் முடித்தார். கல்லூரியின் முதலாமாண்டு முதலே போட்டி நிரலாக்கத் தேர்வுகளில் (Competitive Programming) ஆர்வம் காட்டி வந்த இவர், தேசிய அளவில் முதல் 100 இடங்களுக்குள் தொடர்ந்து நீடித்து வருகிறார்.

குறிப்பிட்ட அந்த நிறுவனத்தில் இரண்டு மாத கோடைகால இன்டர்ன்ஷிப் பயிற்சியில் இரண்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் தீவிரமான பயிற்சி மற்றும் திட்டப் பணிகளை வெற்றிகரமாக முடித்த இந்த மாணவருக்கு மட்டும் ரூ.2.5 கோடி சம்பளத்துடன் கூடிய முழுநேர மென்பொருள் பொறியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் இவர் நெதர்லாந்து அலுவலகத்தில் பணியில் சேர உள்ளார்.

தனது வெற்றி குறித்து அந்த மாணவர் கூறுகையில், “ஐஐடியின் நெகிழ்வான பாடத்திட்டம் மற்றும் கோடிங் (Coding) பயிற்சிக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமே சவாலான இந்த வேலைவாய்ப்பைப் பெற உதவியது” என்றார். இவரது பெற்றோர் இருவரும் பொறியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு ஐஐடி ஹைதராபாத்தின் வேலைவாய்ப்பு பருவம் (2024-25) மிகவும் உற்சாகமாகத் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு சராசரி சம்பளம் ரூ.20.8 லட்சமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு அது 75 சதவீதம் உயர்ந்து ரூ.36.2 லட்சமாக அதிகரித்துள்ளது.

நடப்பு பருவத்தில் இதுவரை ஐஐடி மாணவர்கள் 24 சர்வதேச வேலைவாய்ப்புச் சலுகைகளைப் பெற்றுள்ளனர். இளங்கலை மாணவர்களில் 62 சதவீதம் பேரும், முதுகலை மாணவர்களில் 196 பேரும் ஏற்கனவே முன்னணி நிறுவனங்களில் பணி நியமன ஆணைகளைப் பெற்றுள்ளனர். உலகளாவிய பொருளாதாரச் சூழலில் சரிவு நிலவும் வேளையில், ஐஐடி மாணவர்களுக்குக் கிடைத்துள்ள இந்தச் சாதனைச் சம்பளம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.