பத்து வருடங்களுக்கு பிறகு கடவுள் கொடுத்த மகிழ்ச்சியை அவரே பறித்துக்கொண்டார்," என்ற கதறல் இந்தூர் பகீரத்புராவின் குறுகிய சந்து ஒன்றில் ஒலிக்கிறது.
ஐந்து மாத குழந்தை அவ்யான் சாஹு, மாசடைந்த குடிநீரால் ஏற்பட்ட வயிற்றுப்போக்கு காரணமாக உயிரிழந்துள்ளான். அவ்யானின் தாய்க்கு தாய்ப்பால் சுரக்காத நிலையில், மருத்துவர்களின் அறிவுரைப்படி பவுடர் பாலில் நர்மதா குழாய் நீரை கலந்து கொடுத்து வந்துள்ளனர். அவர்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்திய அந்த நீரே விஷமாக மாறி, பல வருட பிரார்த்தனைக்குப் பிறகு பிறந்த அந்த குழந்தையின் உயிரை குடித்துவிட்டது.
அவ்யானின் தந்தை சுனில் தன் மகனுக்கு காய்ச்சலும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டபோது, அது சாதாரண உபாதை என்றே கருதியுள்ளார். மாசடைந்த நீர் குறித்த எந்த எச்சரிக்கையும் அதிகாரிகளால் வழங்கப்படாத நிலையில், வழக்கம்போல தண்ணீரை வடிகட்டியே பயன்படுத்தியுள்ளனர். ஆனால், ஞாயிற்றுக்கிழமை இரவு நிலைமை மோசமாகி, திங்கள்கிழமை காலை மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவ்யான் மறைந்தான்.
இந்தூரில் மாசடைந்த நீரால் உயிரிழந்த பலரில் அவ்யானும் ஒருவன் என்பதுதான் வேதனை. தூய்மையான நகரம் என்று பெருமை பேசும் ஒரு மாநகரத்தில், குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்கத் தவறிய அதிகாரிகளின் அலட்சியமே இத்தகைய மரணங்களுக்கு காரணம் என அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.
Edited by Siva