பீகார் முதலமைச்சராக 10-வது முறையாகப் பதவியேற்றுள்ள நிதிஷ்குமார் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களின் சொத்து விவரங்கள் மாநில அரசின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
ஒவ்வோர் ஆண்டும் இறுதி நாளில் அமைச்சர்கள் தங்கள் சொத்து கணக்கைக் காட்டுவது அம்மாநிலத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலமைச்சர் நிதிஷ்குமாரின் மொத்த சொத்து மதிப்பு 1.65 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டை விடச் சுமார் 68,455 ரூபாய் அதிகமாகும். அவரிடம் ரொக்கமாக 20,552 ரூபாயும், வங்கி கணக்குகளில் 57,800 ரூபாயும் உள்ளன.
மேலும், டெல்லியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பும், சுமார் 17.66 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும் அவருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை முதலமைச்சர்களான சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்கா ஆகியோரும் தங்களது சொத்து விவரங்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
சவுத்ரியிடம் 1.35 லட்சம் ரூபாய் ரொக்கமும், 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு துப்பாக்கியும், மொத்தம் 4.91 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன.
மற்றொரு துணை முதலமைச்சரான விஜய் குமார் சின்காவிடம் 48.46 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும், 77,181 ரூபாய் மதிப்பிலான ஒரு கைத்துப்பாக்கியும் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சர்களின் இந்த வெளிப்படையான சொத்து அறிவிப்பு பொதுமக்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.