திருப்பூர் மாவட்டம் சிவன்மலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கிளை அலுவலகத்தைத் திறந்து வைத்த அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், வரும் 2026-ஆம் ஆண்டு விஜய் தலைமையில் தமிழகத்தில் தூய்மையான ஆட்சி அமையும் என்று உறுதியாகத் தெரிவித்தார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளால் விரும்பப்படும் தலைவராக விஜய் இருப்பதாகவும், அவரே தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர் என்றும் அவர் புகழாரம் சூட்டினார். மேலும், தி.மு.க கூட்டணியில் தற்போது சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகவும், விசிக கட்சி வருகிறதோ இல்லையோ, அக்கட்சியின் தொண்டர்கள் பலரும் த.வெ.க-வை நோக்கித் தான் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் அதிரடியாகக் கூறினார்.
கூட்டணி குறித்துப் பேசிய செங்கோட்டையன், ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி தினகரன் ஆகியோரது எண்ணமும் நல்லாட்சி அமைய வேண்டும் என்பதே என்று குறிப்பிட்டார். திருப்பூரில் தி.மு.க நடத்திய மகளிர் மாநாடு குறித்த கேள்விக்கு, பணம் கொடுத்து ஆட்களைக் கூட்டி வருவது எளிது என விமர்சித்த அவர், விஜய்யை முதலமைச்சராக ஏற்பவர்கள் மட்டுமே த.வெ.க கூட்டணியில் இணைய முடியும் என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
இளைஞர்கள் அனைவரும் விஜய்யையே முதலமைச்சராகப் பார்க்க விரும்புவதாகவும், 2026 தேர்தலில் த.வெ.க தனது வெற்றி இலக்கை நிச்சயம் எட்டும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.